Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னையில் முதன்முறையாக செல்லப்பிராணிகளுக்கு பிரத்யேக பூங்கா

சென்னை: செல்லப்பிராணிகளுக்கு என்று தமிழ்நாட்டில் முதன் முறையாக பிரத்யேக பூங்கா, ரூ.1 கோடி செலவில் சென்னையில் உருவாக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில், கடந்த மே மாதம், ஒரு சிறுமியை 2 ராட்வைலர் நாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து, அந்த நாய்களின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். படுகாயமடைந்த சிறுமி, சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

சென்னையில் இதுபோன்ற சம்பவங்கள் இதற்கு முன்பே நடந்திருந்தாலும், இந்த குறிப்பிட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பொதுமக்கள் காலை, மாலை நேரங்களில் நடை பயிற்சி செய்யும் இதுபோன்ற பூங்காக்களில் சிலர் தங்களின் வளர்ப்பு நாய்களுடன் வருகின்றனர். தனது உரிமையாளர்களை மட்டுமே பார்த்து பழகிய இந்த வளர்ப்பு நாய்கள், வெளியில் திடீரென பெரிய கூட்டத்தை பார்த்ததும், அச்சத்தில் எகிறிக் கடிக்க ஆரம்பித்து விடுகின்றன.

இதன்காரணமாக, வளர்ப்பு நாய்களை பொது இடங்களில் கொண்டு வரும்போது, சில கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும், என மாநகராட்சி உத்தரவிட்டது. குறிப்பாக, முகக்கவசம், சங்கிலி அணிய வேண்டும், தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஐதராபாத் போன்ற மெட்ரோ பாலிடன் சிட்டிகளில் வளர்ப்பு பிராணிகளை அழைத்துப் போய் உலாவ விடுவதற்கு என்று தனி பூங்காக்கள் உள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் அப்படி ஒரு பூங்கா இதுவரை இல்லை. இந்நிலையில், மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட டிமாண்டி காலனியில் உள்ள ஒரு பூங்காவை செல்லப் பிராணிகள் விளையாடுவதற்காக மாற்றும் திட்டத்தை, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் அனுமதி கோரி, மயிலாப்பூர் எம்எல்ஏ த.வேலு, மாநகராட்சியிடம் அனுமதி கோரி இருந்தார்.

அதன்பேரில், டிமாண்டி காலனி பூங்காவை செல்லப் பிராணிகள் விளையாட்டு பூங்காவாக மாற்ற ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இத்திட்டத்திற்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு சுமார் 30 நாய்கள் தங்க வைக்கும் அளவுக்கு வசதிகள் செய்யப்பட உள்ளன. மேலும், செல்லப் பிராணிகள் நடைபயிற்சி மேற்கொள்ளவும், ஓடி ஆடி விளையாடவும் வசதிகள் செய்து தரப்பட உள்ளன. செல்லப்பிராணிகள் வளையங்களில் ஏறி விடுவதற்கும் பந்துகளை போட்டு உருட்டி விளையாடுவதற்குமான வசதிகள் அமைக்கப்பட உள்ளன.

இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அதிக அளவில் செல்லப்பிராணிகளை வளர்த்து வருகின்றன. இவர்களில் அதிகம் பேர் முறையான உரிமமும் வைத்துள்ளனர். ஆகவே, இந்த பூங்காவை மாநகராட்சி தேர்வு செய்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால், வளர்ப்பு நாய் உரிமையாளர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘இந்த பூங்காவுக்கு வரும் செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் அனைவரும் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது. அந்த கட்டுப்பாட்டை நாங்கள் விதிக்கவில்லை.

இருந்தாலும் செல்லப்பிராணி வைத்துள்ள உரிமையாளர்கள் விண்ணப்பித்து உரிய முறையில் உரிமத்தைப் பெறுவதை நாங்கள் ஊக்குவிக்கவே செய்கிறோம். இதுவரை பெறப்பட்ட விண்ணப்பங்களிலிருந்து, கிடைத்த தரவுகளின் அடிப்படையில் இந்தப் பகுதியில்தான் உரிமம் பெற்ற செல்லப்பிராணி உரிமையாளர்கள் அதிக எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். ஆகவே இந்தப் பூங்கா அவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் சென்னையில் இதுவே முதல் பூங்காவாகும். ஆனால் டிமாண்டி காலனி பூங்காவிலிருந்து கிடக்கும் பொதுமக்கள் கருத்துகளின் அடிப்படையில் இன்னும் பல இடங்களில் இதே மாதிரி பூங்காக்கள் அமைக்க அதிகாரிகள் உரிய இடங்களை அடையாளம் காண உள்ளனர்,’’ என்றனர்.