சென்னையில் வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்துவது கட்டாயம் என்ற உத்தரவு அடுத்த மாதம் முதல் அமல்..!!
சென்னை: சென்னையில் வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்துவது கட்டாயம் என்ற உத்தரவு அடுத்த மாதம் அமலுக்கு வருகிறது. சென்னையில் வீட்டு நாய்களுக்கு உடலில் ‘சிப்’ பொருத்தவும், 4 ஆயிரம் தெரு நாய்களின் உடலில் அரிசி வடிவ சிப்பும் பொருத்தவும் சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னையில் உள்ள 1.8 லட்சம் தெரு நாய்களில் உடலில் சிப் பொருத்தும் பணியை மாநகராட்சி நிர்வாகம் செய்ய தொடங்கியுள்ளது. வீட்டு நாய்கள் உள்ளிட்ட செல்ல பிராணிகளுக்கு உரிமம் பெற உடலில் சிப் பொருத்துவதை கட்டாயப்படுத்தும் வகையில் சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் ஜனவரி 30ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னையில் முதல் கட்டமாக 4000 தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில், வீட்டு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்துவது கட்டாயம் என்ற உத்தரவு அடுத்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது. வளர்ப்பு நாயை பராமரிக்க முடியாவிட்டால் உரிமையாளர்கள் நாய்களை சாலையில் விட்டுச் செல்கின்றனர். வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தாவிட்டால் ரூ.3,000 அபராதம் விதிக்கவும் சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.