Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னையில் மழைநீரை அகற்ற 50 எச்.பி. வரையிலான 594 மோட்டார் பம்புகள், 192 நீர்மூழ்கி பம்புகள் தயார் நிலையில் உள்ளன!!

சென்னை : பெருநகர சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக பயன்படுத்தப்படவுள்ள அனைத்து வகை வாகனங்கள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை தயார்படுத்தும் பணி இன்று (15.09.2025) மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பெருநகர சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, மழைக்காலத்தில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ள ஜே.சி.பி. இயந்திரங்கள், மரக்கிளை அகற்றும் இயந்திரங்கள், மரக்கிளை அகற்றும் சக்திமான் இயந்திரங்கள், பாப்காட், ரோபோடிக் எக்ஸ்கவேட்டர்கள், ஆம்பிபியன், மினி ஆம்பிபியன், சூப்பர் சக்கர் வாகனங்கள், கையினால் இயக்கும் மர அறுவை இயந்திரங்கள், மின்சாரத்தால் இயக்கப்படும் மர அறுவை இயந்திரங்கள், ஜெனரேட்டர்கள், டீசல் பம்புகள், நீர் மூழ்கி மோட்டார்கள் உள்ளிட்ட அனைத்து வகையான வாகனங்கள், இயந்திரங்கள், உபகரணங்கள் ஆகியவற்றை சரிபார்த்து தயார்படுத்தும் பணிகள் இன்று (15.09.2025) பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகள் உரிய பொறுப்பு அலுவலர்களின் வாயிலாக கண்காணித்து மேற்கொள்ளப்பட்டது.

மேலும், வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, மோட்டார் பம்புகளுடன் கூடிய டிராக்டர்கள் ரிப்பன் கட்டட வளாகத்திற்கு வரப்பெற்று தயார்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, தாழ்வான இடங்களில் தேங்கும் மழைநீரை அகற்றும் பணிக்காக, பெருநகர சென்னை மாநகராட்சியில் 50 எச்.பி. திறன் வரையிலான 594 மோட்டார் பம்புகள், 192 நீர்மூழ்கி பம்புகள், 500 டிராக்டர் பம்புகள், 100 எச்.பி. திறன் கொண்ட 150 டீசல் பம்புகள் பயன்படுத்தப்படவுள்ளன. மேலும், 2 ஆம்பிபியன், 3 ஆம்பிபியன் எஸ்கவேட்டர்கள், பல்வகை பயன்பாட்டிற்கான 6 ரோபோடிக் எஸ்கவேட்டர்கள், 3 மினி ஆம்பிபியன், 7 சூப்பர் சக்கர் வாகனங்கள், 15 மரக்கிளை அகற்றும் சக்திமான் வாகனங்கள், கையினால் இயக்கப்படும் 224 மரக்கிளை அகற்றும் இயந்திரங்கள், மரக்கிளை அகற்றும் 52 டெலஸ்கோபிக் இயந்திரங்கள், கிரேன் பொருத்தப்பட்ட 5 வாகனங்கள், 7 ஜே.சி.பி. வாகனங்கள், 60 பாப்காட் வாகனங்கள், 93 டிப்பர் லாரிகள், 1 டெலிஹேண்ட்லர் வாகனம் என மொத்தம் 478 வாகனங்கள் மற்றும் இயந்திரங்களும் பயன்படுத்தப்படவுள்ளன.