Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னை பெருநகர பேருந்துகளில் டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்துவது குறைவு: அதிகரிக்க நடவடிக்கை என அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னை பெருநகர பேருந்துகளில் 2.73 சதவீத பயணிகள் மட்டுமே டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்துகின்றனர். சென்னை பெருநகரப் போக்குவரத்துக் கழகத்தின் (எம்டிசி) பேருந்து சேவையை கடந்த மாதம் 10.4 கோடி பயணிகள் பயன்படுத்தி உள்ளனர். இதில் 2.73 சதவீத பயணிகள் மட்டுமே சிங்கார சென்னை அட்டை, யுபிஐ, டெபிட்/கிரெடிட் கார்டுகள் அல்லது சென்னை ஒன் செயலி மூலம் டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்தியுள்ளனர்.

எம்டிசி வழங்கிய தரவுகளின்படி, விடியல் பயணத் திட்டத்தின் கீழ் 3.97 கோடி பெண்கள் இலவசமாக பயணித்துள்ளனர், கட்டணம் செலுத்திய பயணிகளில், 3.57 கோடி பேர் பணமாகவும், 1.38 கோடி பேர் 1,000 மற்றும் 2,000 ரூபாய் மாதாந்திர பயண அட்டைகளைப் பயன்படுத்தியுள்ளனர். கடந்த ஆண்டு முதல் எம்டிசி படிப்படியாக ஆன்லைன் சேவைகளை விரிவுபடுத்தி வருகிறது என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:

சென்னையில் பேருந்து பயன்படுத்தும் பயணிகளில் பெரும்பாலானோர் மாணவர்கள் மற்றும் முதியவர்கள், அவர்கள் இலவச பயண அட்டைகளை பயன்படுத்துகின்றனர். பலரிடம் கைபேசி இருப்பதில்லை. டிஜிட்டல் மயமாக்கல் என்ற பெயரில் அவர்களை விலக்க முடியாது. இருப்பினும் கடந்த ஆண்டு முதல் எம்டிசி படிப்படியாக ஆன்லைன் சேவைகளை விரிவுபடுத்தி வருகிறோம். 2024 பிப்ரவரியில் யுபிஐ மூலம் டிக்கெட் வாங்கும் இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அக்டோபர் 13 அன்று, யுபிஐ, சிங்கார சென்னை அட்டை, டெபிட்/கிரெடிட் கார்டுகள் மற்றும் சென்னை ஒன் செயலி மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் 11 சதவீதமாக உயர்ந்துள்ளது.

சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் மாத இறுதிக்குள் 1,000 மற்றும் 2,000 எம்டிசி பயண அட்டைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்க திட்டமிட்டுள்ளது. இருப்பினும், ஆன்லைன் சேவைகள் அனைத்து பிரச்னைகளையும் தீர்க்கவில்லை. ஆன்லைன் பயண அட்டை மூலம் பயணிகள் எங்கு இறங்குகிறார்கள் என்பதைக் காட்டுவதில்லை. இது பயணப் பழக்கங்களை ஆய்வு செய்ய எங்களுக்கு தடையாக உள்ளது. இதற்கு ஒரு தீர்வு காண பணியாற்றி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.