மீனம்பாக்கம்: சென்னை மற்றும் மதுரையில் நடைபெறும் ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டிகளில் பங்கேற்க, நேற்று வங்கதேசத்தை சேர்ந்த ஜூனியர் ஆண்கள் அணியினர் விமானம் மூலமாக சென்னை வந்தனர். அவர்களுக்கு விமானநிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் சென்னை, மதுரை ஆகிய 2 இடங்களில் வரும் 28ம் தேதி முதல் டிசம்பர் 10ம் தேதிவரை நடப்பு ஆண்டுக்கான ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி நடைபெறுகிறது. இதில், சர்வதேச அளவில் தலைசிறந்த 24 அணிகள் பங்கேற்கின்றன. இப்போட்டிகளை தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும், இந்திய ஹாக்கி சம்மேளனமும் இணைந்து நடத்துகின்றன.
சென்னை மற்றும் மதுரையில் நடைபெறும் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்று விளையாடுவதற்கு, வங்கதேச நாட்டின் தலைநகர் டாக்காவில் இருந்து நேற்று மாலை யு.எஸ் பங்களா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மூலமாக வங்கதேசத்தை சேர்ந்த ஜூனியர் ஆண்கள் ஹாக்கி அணியினர் சென்னைக்கு வந்தனர். அவர்களை சென்னை விமானநிலையத்தில் தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், பெண்கள் ஆரத்தி எடுத்து, செண்டை மற்றும் மேளதாளங்கள் முழங்க, கிராமிய நடனங்களான ஒயிலாட்டம், மயிலாட்டத்துடன் மாலை அணிவித்து, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் விமானநிலையத்தில் இருந்து சொகுசு பேருந்து மூலம் வங்கதேச ஜூனியர் ஹாக்கி அணி வீரர்கள் சென்னை நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்குவதற்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த அணியில் 15 வீரர்கள், உதவியாளர்கள் மற்றும் 2 பயிற்சியாளர்கள் என மொத்தம் 20 பேர் தமிழகத்துக்கு வருகை தந்துள்ளனர். நட்சத்திர விடுதியில் ஓய்வெடுக்கும் வங்கதேச ஜூனியர் ஹாக்கி வீரர்கள், சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் பயிற்சியிலும் ஈடுபடுகின்றனர். இதைத் தொடர்ந்து, வரும் 28ம் தேதி முதல் துவங்கும் போட்டிகளில் பங்கேற்கின்றனர் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.


