Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னையில் மேகவெடிப்பால் கனமழை; மணலியில் 27 செ.மீ கொட்டியது: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பெய்த அதிகனமழை காரணமாக மணலியில் ஒரு மணி நேரத்தில் 10 செமீ அளவைத் தாண்டி மழை பெய்துள்ளதால், மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது. மொத்தத்தில் நேற்று இரவு 10 மணிமுதல் இரவு 12 மணிவரை மணலியில் 27 செ.மீ மணலி புதுநகர் பகுதியில் 26 செ.மீ விம்கோ நகரில் 23 செமீ என அதி கனமழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து அனேக இடங்களில் மழை பெய்து வருகிறது. வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் ெதாடர்ச்சியாக உருவாகி வரும் காற்றழுத்தங்கள் வடமேற்கு திசையில் பயணித்து அரபிக் கடல் பகுதிக்கு செல்வதால், தென்மேற்கு பருவக் காற்றை வடக்கு பகுதிக்கு வந்து வட மாநிலங்களில் கடும் மழைப்பொழிவை கொடுத்து வருகிறது. அதன் காரணமாக மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், உத்தரகண்ட், உள்ளிட்ட மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுதவிர இமாச்சல பிரதேசத்தை ஒட்டிய பகுதிகளிலும் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதற்கிடையே ஜம்மு காஷ்மீர், உத்தரகண்ட் மாநிலங்களில் இரு காற்று இணைவு ஏற்பட்டு மேக வெடிப்புகளும் ஏற்பட்டு அந்த மாநிலங்கள் மழை வெள்ளத்திலும், மலைசரிவுகளையும் சந்தித்து வருகின்றன.

பொதுவாக மேகவெடிப்புகள் மலைப்பிரதேசங்களில் தான் அதிகமாக நிகழும் இயற்கை நிகழ்வு என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தமிழகத்தை பொருத்தவரையில் நிலப்பரப்பில் இது போன்ற மேகவெடிப்புகள் ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும் தெரிவிக்கின்றனர். ஆனால் கடந்த ஆண்டில் ராமநாதபுரத்தில் ஒரே இரவில் 370 மிமீ மழை கொட்டித் தீர்த்தது. கேரளாவிலும் வயநாடு பகுதியில் இதுபோல மேகவெடிப்பு ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் தமிழகத்தில் இது போன்ற பெரிய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ள நிலையில், சென்னையில் நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக மணலியில் மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது. வெப்பக் காற்று மற்றும் குளிர்க்காற்றும் இணையும் நேரங்களில் அதிக ஈரப்பதம் மேகங்களில் சேரும் போது அது தாங்காமல் ஒரு மணி நேரத்தில் 10 செ.மீக்கு மேல் மழை பெய்தால் அது மேகவெடிப்பு என்று கணக்கிடப்படுகிறது. அதேநிலை நேற்று முன்தினம் மணலியில் நிகழ்ந்துள்ளது. மேலும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 6 இடங்களில் அதற்கு நிகரான அளவில் மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்ைன வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஆகஸ்ட் 30ம் தேதி இரவு 10 மணிமுதல் இரவு 12 மணிவரையில் பெய்த மழையில் மணலியில் 27 செ.மீ மணலி புதுநகர் பகுதியில் 26 செ.மீ விம்கோ நகரில் 23 செமீ என மிக கனமழை பெய்துள்ளது. மேகவெடிப்புக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் (ஒரு மணி நேரத்தில் 10 செமீ பெய்வது) என்ற அளவின்படி ஆகஸ்ட் 30ம் தேதி இரவு 10 மணி முதல் 11 மணிவரையில் மணலியில் 10.6 செமீ பெய்துள்ளது. இரவு 11 மணி முதல் 12 மணி வரையில் விம்கோ நகரில் 15.7 செமீ மழை பெய்துள்ளது. அதை் தொடர்ந்து கொரட்டூரில் 13.7 செமீ, மணலியில் 12.66 செமீ, மணலி புதுநகரில் 10.3 செமீ பெய்துள்ளதால் இந்த பகுதிகளில் மேகவெடிப்பு ஏற்பட்டதாக கருதப்படுகிறது.

இது தவிர எண்ணூரில் அதே நாள் இரவு 10 மணி முதல் 11 மணி வரையில் 8.85 செமீ, மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது தவிர சென்னை மற்றும் புறநகரில் கொரட்டூர் 18.2 செமீ, கத்திவாக்கம் 13.7 செமீ, திருவொற்றியூர் 12.6 செமீ, அயப்பாக்கம் 12.1 செமீ மழை என கனமழை பெய்துள்ளது. மேலும், சென்னை பாரிமுனை 11.5 செமீ, அம்பத்தூர் 11.2 செமீ, நெற்குன்றம் 11 செமீ, தண்டையார்பேட்டை 10.2 செமீ, ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி 9.8 செமீ, கொளத்தூர் 9.7 செமீ, அயனாவரம் 9.6 செமீ, காசிமேடு 9.5 செமீ, வளசரவாக்கம் 9.1 செமீ, வட ெசன்னை 8.6 செமீ, புழல், பெரம்பூர், வில்லிவாக்கம் 8.1 செமீ, அமைந்தகரை 7.9 செமீ, செம்பரம்பாக்கம் 77 செமீ, ஊத்துக்கோட்டை 7.7 செமீ, செங்குன்றம் 7.6 செமீ, அண்ணா நகர் மேற்கு 7.6 செமீ, ஒக்கியம் துரைப்பாக்கம் 7.3 செமீ, பூந்தமல்லி 7.3 செமீ, தாமரைப்பாக்கம் 6.7 செமீ, பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வட சென்னையை பொருத்தவரையில் ஒரே இரவில், மணலி மற்றும் அதைசுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து அது மேகவெடிப்பு நிகழ்வாக மாறியுள்ளது வானிலை ஆய்வாளர்களை சிந்திக்க வைத்துள்ளது. குமரிக் கடல் மற்றும் மன்னார் வளைகுடாப் பகுதியில் வலுவான காற்று நிலை கொண்டுள்ளது. வங்கக் கடலின் வலுவான காற்று, அரபிக் கடலில் இருந்து வரும் தரையை நோக்கிய காற்று ஆகிய முக்கடல் காற்றுகள் தமிழகத்தில் நீடித்துக் கொண்டு இருப்பதால் வட கடலோரப் பகுதிகளில் அதிகனமழை 3ம் தேதி வரை பெய்யும் வாய்ப்பு இருப்பதால் மேற்கண்ட வட சென்னைப் பகுதியில் அதிகனமழை பெய்து மேகவெடிப்பு ஏற்பட வாய்ப்பாக அமைந்துவிட்டது என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையடுத்து, புதிய காற்றழுத்த தாழ்வு நிலை வங்கக் கடல் நேக்கி வருகிறது. அது வங்கக் கடலுக்குள் வந்த பிறகு 2, 3ம் தேதிகளில் ஆந்திரா கர்நாடகா, வழியாக பயணித்து 4ம் தேதி குஜராத்துக்கு சென்றுவிடும். அதுவரை தென்மேற்கு பருவமழை லேசாக பெய்யும். இருப்பினும், நேற்று முன்தினம் மணலியில் பெய்தது போல செப்டம்பர் மாதத்தில் அடிக்கடி அதீத மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. அதற்கு முன்னோட்டமாக இரண்டு இடங்களில் வட சென்னையில் மணலியில் 27.1 செமீ, மணலி புதுநகர் பகுதியில் 22.8 செமீ, விம்கோநகர் பகுதியில் பெய்துள்ளது. இது தவிர வட சென்னையில் பல இடங்களில் 15 செமீ மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில் விஜிபியில் நீலாங்கரைப் பகுதியில் மழை பெய்யவில்ைல என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோலத்தான் செப்டம்பரில் பெய்யும் என்று வானிலை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தென் சீனக் கடல் பகுதியில் இருந்து வரும் வலுவிழந்த புயல் ஒன்று வங்கக் கடலில் நுழைந்து 10ம் தேதியில் விசாகப்பட்டினம்- மசூலிப்பட்டினத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் நிலை கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது வளிமண்டல சுழற்சி தமிழகத்தில் இ ருக்கும். இந்நிலையில், வடக்கு காற்று தமிழ்நாடு வந்துதான் கடலில் இறங்கும். கண்டிப்பாக வட கடலோர மற்றும் வட உள் மாவட்டங்களில் மழை பெய்யும். இதன் காரணமாக தமிழகத்தில் நல்ல மழை பெய்யும் வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்திய வானிலை ஆய்வு மையம் தென் மேற்கு பருவமழை தொடர்பாக வெளியிட்டுள்ள நீண்ட கால வானிலை அறிக்கையில், இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை தீவிரமாக இருக்கும் என்றும் செப்டம்பர் மாதத்திலும் அதி கனமழை முதல் மிக மிக கனமழை பெய்வதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக தெரிவித்துள்ளது. பிசிபிக் பெருங்கடல் பகுதியில் நிலையாக இருக்கும் எல்-நினோ அமைப்பு காரணமாக கூறப்படுகிறது. அதன்படி செப்டம்பர் 10ம் தேதி வங்கக் கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் அதிக மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேகவெடிப்பு குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி செந்தாமரைக் கண்ணன் கூறியதாவது: பொதுவாக பருவமழைக் காலங்களில் ஏற்பட்டும் காற்றழுத்தங்கள் காரணமாக தொடர்ச்சியாக மழை பெய்வது உண்டு. அப்போது மேற்கு திசையில் இருந்து வரும் தரைக்காற்றும், கடல் பகுதியில் இருந்து எதிர்த்திசையில் வீசும் காற்றும் இணையும் போது மேகங்களில் மேலெடுத்து செல்லும் அப்போது மேகவெடிப்பு ஏற்படுவதுண்டு. அடுத்ததாக, கோடை மழை பெய்யும் போது வெப்பச் சலன மழை என்பது தொடர்ச்சியாக பெய்யாமல் அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் என குறுகிய காலத்தில் அதிக மழை பெய்து முடித்துவிடும். அப்போது ஒருமணி நேரத்தில் 20 செமீக்கு அதிகமாக மழை பெய்தால் அது மேகவெடிப்பு என்று எடுத்துக் கொள்ளப்படும்.

தமிழகத்தில் இது போன்ற மேகவெடிப்புகள் தரைப்பகுதியில் நடக்காது. ஆனால் கடலோரப் பகுதியில் நடக்க வாய்ப்புள்ளது. அதுவும் அரிதான ஒன்றுதான். நேற்று முன்தினம் மணலியில் ஏற்பட்ட மேகவெடிப்பும் கடலோரப் பகுதியில் ஏற்பட்ட மேகவெடிப்புதான். இது வெப்பச் சலன மழைகாணமாக ஏற்பட்டது. பொதுவாக சொல்ல வேண்டும் என்றால் தெற்கு ஆந்திரா முதல் வடதமிழகம் வரையில் ஒரு இடிமின்னல் ஏற்படும் ஒரு கட்டமைப்பு உள்ளது. அதன்படி மணலி எண்ணூர் பகுதியில் அதிக அளவில் நேற்று முன்தினம் அழுத்தம் ஏற்பட்டு ஒரு மணி நேரத்தில் 20 செமீக்கும் மேல் மழை பெய்துள்ளதும் ஒரு காரணம். இவ்வாறு வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி செந்தாமரைக் கண்ணன் தெரிவித்தார்.

ஜெர்மனியில் இருந்து கேட்டறிந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழை குறித்து ஜெர்மனியில் இருந்து தொலைபேசி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். மழை அளவு குறித்தும் அதனால் சாலைப் போக்குவரத்து, மழை நீர் வடிகால் மற்றும் தாழ்வான பகுதிகளில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா என்று கேட்டறிந்தார். கனமழையால் பெரிய அளவில் எவ்வித பாதிப்புகள் இல்லை, சுரங்கப்பாதைகள் உள்ளிட்ட எல்லாப் பகுதிகளிலும் சாலைப்போக்குவரத்து சீராக உள்ளது என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் எத்தகைய மழைச்சூழலையும் எதிர்கொள்ள கூடிய அளவில் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் பெரு மழை காரணமாக பொது மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பணியாற்றவும் முதல்வர் அறிவுறுத்தியதாக சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.