Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னையில் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து ரூ.95,200க்கு விற்பனை: நகை வாங்குவோர் அதிர்ச்சி

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்துள்ளது. தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்த நிலையில் பிற்பகலில் ரூ.800 அதிகரித்துள்ளது. ஒரே நாளில் அதிரடியாக தங்கம் விலை பவுனுக்கு ரூ.2400 அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ.800 உயர்ந்து ரூ.95,200க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,900க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மீண்டும் ரூ.95ஆயிரத்தை நெருங்கியதால் நகை வாங்குவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை நாள்தோறும் மாற்றங்களை சந்தித்து வருகிறது. தங்கம் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தாறுமாறாக உயர்ந்து மக்களை கதி கலங்க வைத்து வருகிறது. இடையிடையே சற்று குறைந்தாலும் அவ்வப்போது புதிய உச்சம் தொட்டு, நகை பிரியர்களுக்கு ஷாக் கொடுத்தது. கடந்த சில வாரங்களாகத் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. தீபாவளி பண்டிகைக்கு முன்பு தங்கத்தின் விலை வேகமாக உயர்ந்த நிலையில், பண்டிகைக்குப் பிறகு திடீரென குறைந்தது.

இதனால் திருமண நகை வாங்க திட்டமிட்டவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனாலும், படிப்படியாக உயர்வதும் குறைவதுமாக போக்கு காட்டி வருகிறது. கடந்த 10ம்தேதியில் இருந்து மீண்டும் எகிறத் தொடங்கியது. 10, 11ம்தேதிகளில் கிராமுக்கு ரூ.400-ம், பவுனுக்கு ரூ.3,200-ம் உயர்ந்து இருந்தது. நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.1,760 உயர்ந்து ஒரு பவுன் ரூ.93,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. புதன்கிழமை கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.11,600-க்கும், பவுனுக்கு ரூ.800 குறைந்து ரூ.92,800-க்கும் விற்பனையானது.

கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.3,160 உயா்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தங்கத்தின் விலை வியாழக்கிழமையான இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.300 உயர்ந்து ரூ.11,900-க்கும், பவுனுக்கு ரூ.2,400 உயர்ந்து ரூ.95,200-க்கும் விற்பனையாகிறது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை, டாலர் மதிப்பு, பொருளாதார நிலவரங்கள் ஆகியவை இந்தியாவில் தங்க விலையைப் பாதிக்கின்றன. திருமண சீசன், பண்டிகை காலத்தையொட்டி தங்க நகை வாங்குவோர் இந்த உயர்வால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் கிராமுக்கு ரூ.300 விலை அதிகரித்துள்ளதால் திருமணம் வைத்துள்ளவர்களும், அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். கடந்த வாரம் விலை குறைந்திருந்த நிலையில் தற்போது தங்கம் விலை மீண்டும் உயர தொடங்கியுள்ளதால் இல்லத்தரசிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.