சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் மேற்கொள்ளப்பட்டுள்ள வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி துரைப்பாக்கம் முக்கிய அணை கால்வாயில் ரூ.27 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் அணைகளை துணை முதலமைச்சர் ஆய்வு செய்தார். காரப்பாக்கம் சென்னை மெட்ரோ ரயில் பாலப் பகுதியில் உள்ள ஒக்கியம் மடுவில் கரைகளை அகலப்படுத்தி சீரமைக்கும் பணியில் நீர் தடையின்றி செல்வதை நேரில் பார்வையிட்டார்.
துரைப்பாக்கம் கண்ணகிநகரில் உள்ள சென்னை மாநகராட்சி விளையாட்டு திடல் மேம்படுத்தும் பணிகளையும் துணை முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். இதனிடையே துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில். சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாக கூறினார். ராஜீவ் காந்தி நெடுஞ்சாலை அருகே ஒக்கியம் மடுவின் வலது கரை சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்ததாகவும்.
பருவமழை காலம் முழுவதும் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பணிகள் நடைபெற்று வருவதாகவும் துணை முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். சென்னை காரப்பாக்கம், சென்னை மெட்ரோ ரயில் பாலப் பகுதியில் உள்ள ஒக்கியம் மடுவில் மழைநீர் தடையின்றி சீராக வெளியேறும் வகையில் செய்யப்பட்டுள்ள பணிகளைப் பார்வையிட்டு,அதிகாரிகளிடம் விவரங்களைக் கேட்டறிந்ததாகவும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
