சென்னை: சென்னை மண்ணடியில் போதைப் பொருள் விற்பனை கும்பலைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 8 பேரையும் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 22 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மண்ணடி பகுதியில் போதைப் பொருள் விற்பனை நடைபெறுவதாக போதைப் பொருள் நுண்ணறிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில் போலீசார் தீவிரமாக கண்காணித்து ஒரு நபரை தொடர்பு கொண்டு வாடிக்கையாளர் போல் நடித்து முகமது சாலிக் என்பவரை முதலில் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பெயரில் ஏழுகிணறு பகுதியை சேர்ந்த அசரப் அலி அதேபோல் ராயபுரத்தை சேர்ந்த பிரபல போதைப்பொருள் பெண் வியாபாரி லைலா பதானியா அவரது மகள் சாமினா மற்றும் சாமினாவின் காதலன் முகமது யாசின் உட்பட மொத்தம் 8 பேரை போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் வீடுகளிலும் போதை பொருள் விற்பனை நடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. சென்னை முழுவதும் பெரிய நெட்ஒர்க் அமைத்து கல்வி நிலையங்கள், அருகில் உள்ள பகுதிகள் என தனியார் நட்சத்திர விடுதிகளில் நடக்கும் பார்ட்டிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்களை குறிவைத்து போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இவர்கள் 8 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
