சென்னை: சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளையும் விலையில்லா உணவு தர முடிவு செய்யப்பட்டுள்ளது. சமையல் நிறுவனங்களை தேர்வு செய்வதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் தினசரி பணியில் இருக்கும் சுமார் 10,000 தூய்மை பணியாளர்களுக்கு, 3 வேளையும் உணவு வழங்குவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக, உணவு தயாரித்து வழங்கும் நிறுவனங்களை தேர்வு செய்ய, மாநகராட்சி சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.
தூய்மைப் பணியாளர்கள் பெரும்பாலும் அதிகாலையிலேயே தங்கள் பணிகளை தொடங்கிவிடுவார்கள். இதனால், பலர் சரியான நேரத்தில் உணவு உட்கொள்வதில்லை. இவர்களுக்கு தினசரி உணவு வழங்குவது, அவர்களின் உடல் நலத்தையும், பணிபுரியும் திறனையும் மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு சமீபத்தில், தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச காலை உணவுத் திட்டம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த திட்டம் தற்போது விரிவுபடுத்தப்பட்டு 3 வேளையும் உணவு அளிக்க ஏற்பாடு செய்யப்படவுள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ.1.87 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த இலவச உணவுத் திட்டம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்பட உள்ளது.