Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சென்னையில் புதிய பள்ளிக் கட்டடங்கள், விளையாட்டுத் திடல்கள்! - மாணவர்களுக்கு மடிக்கணினி!

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று (24.9.2025) பெரம்பூர், பேப்பர் மில்ஸ் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முரசொலி மாறன் பூங்காவினை 8 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மறுசீரமைக்கும் பணி மற்றும் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 13 கோடியே 95 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

மேலும், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 8 கோடியே 65 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இரண்டு பள்ளிக் கட்டடங்கள், மேம்படுத்தப்பட்ட கால்பந்து மைதானம் மற்றும் விளையாட்டுத் திடலை திறந்து வைத்தார்.

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் முரசொலி மாறன் பூங்கா மறுசீரமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டுதல்

வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் பெரம்பூரில் அமைந்துள்ள முரசொலி மாறன் பூங்காவினை 8 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மறுசீரமைக்கும் பணிக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் அடிக்கல் நாட்டப்பட்ட பணிகளின் விவரங்கள்

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், சீனிவாச நகர் 3-வது பிரதான சாலையில் 1 கோடியே 40 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையக் கட்டடம் மற்றும் சமையல்கூடம்;

ஜி.கே.எம். காலனி பிரதான சாலையில் 28 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பல்நோக்கு மையக் கட்டடம்; ஜி.கே.எம். காலனி 32-வது தெருவில் 31 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்நோக்கு மையக் கட்டடம்;

பல்லவன் சாலையில் அமைந்துள்ள தாங்கல் மயான பூமியில் 1 கோடியே 96 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு உள்கட்டமைப்புகளுடன் கூடிய நீத்தார் மண்டபம்; வார்டு 64 முதல் 78 வரையிலான பல்வேறு தெருக்களில் 10 கோடி ரூபாய் மதிப்பில் 10,463 LED தெரு விளக்குகளை மாற்றி புதிய விளக்குகள் பொருத்தும் பணி;

என மொத்தம் 13 கோடியே 95 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டினார்.

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் திறந்து வைக்கப்பட்ட பணிகளின் விவரங்கள்

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் திரு.வி.க. நகர் மண்டலம், சோமையா தெருவில் புதிதாக 10 வகுப்பறைகளுடன், 3 கோடியே 59 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் தரை மற்றும் முதல் தளத்துடன், சுற்றுச்சுவர் உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள சென்னை உயர்நிலைப் பள்ளிக் கட்டடம் மற்றும் பெரம்பூர், ரங்கசாயி தெருவில் புதிதாக 10 வகுப்பறைகளுடன் தரை மற்றும் முதல் தளத்துடன், சுற்றுச்சுவர் உள்ளிட்ட வசதிகளுடன் 3 கோடியே 96 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சென்னை நடுநிலைப் பள்ளிக் கட்டடம்;

திரு.வி.க. நகர் மண்டலம், ரங்கசாயி தெருவில் அமைந்துள்ள மேயர் முனுசாமி விளையாட்டு திடலில் 64 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் செயற்கை நீரூற்று, குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள், திறந்தவெளி உடற்பயிற்சி உபகரணங்கள், திறந்தவெளி இறகு பந்தாட்ட மைதானம், மின் விளக்குகள், பசுமை புல்வெளி உள்ளிட்ட வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட ஆஸ்ட்ரோ டர்ஃப் கால்பந்து மைதானம்;

திரு.வி.க. நகர் மண்டலம், அமிர்தம்மாள் காலனியில் 45 இலட்சம் ரூபாய் செலவில் இறகுப்பந்து மைதானம், சிறுவர் விளையாட்டு மைதானம் மற்றும் திறந்தவெளி உடற்பயிற்சி உபகரணங்களுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட விளையாட்டுத் திடல்;

என மொத்தம் 8 கோடியே 65 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இரண்டு பள்ளிக் கட்டடங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட கால்பந்து மைதானம் மற்றும் விளையாட்டுத் திடலை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

முன்னதாக, சோமையா தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள அய்யன் திருவள்ளுவர் சிலையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

பின்னர், சோமையா தெருவில் 4.19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டுமானப் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஜவஹர் நகரில் அமைந்துள்ள கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல்

கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உபகரணப் பொருட்கள் மற்றும் மடிக்கணினியை வழங்கினார். மேலும், பயனாளிகளுக்கு மருத்துவ உதவித் தொகை, திருமண உதவித் தொகை, மாவு அரவை இயந்திரங்கள், மூன்று சக்கர மோட்டார் வாகனம், தள்ளுவண்டி, சாலையோர வியாபாரிகளுக்கு குடைகள் ஆகியவற்றை வழங்கினார்.

அனிதா அச்சீவர்ஸ் அகாடமி

அதனைத் தொடர்ந்து, பெரியார் நகர் விளையாட்டு மைதானத்தில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பயிற்சி முடித்த 126 மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகள் மற்றும் சான்றிதழ்களையும், 356 மகளிர்க்கு தையல் இயந்திரங்கள் மற்றும் சான்றிதழ்களையும் வழங்கினார்.

மேலும், கொளத்தூரிலுள்ள கலைஞர் நூற்றாண்டு கண் சிகிச்சை மையத்தில் பரிசோதனை மேற்கொண்டவர்களில் 200 நபர்களுக்கு மூக்குக் கண்ணாடிகள் மற்றும் புத்தாடைகளை முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் வழங்கினார்.