கோவை: கோவை பீளமேடு ஆவாரம்பாளையத்தில் ரயில்வே தண்டவாளத்தில் கல் வைத்த சென்னை சிறுவனை போலீசார் கைது செய்தனர். திருவனந்தபுரத்தில் இருந்து கோவை வழியாக சென்னை சென்ட்ரல் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 24ம் தேதி இரவு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டது. 25ம் தேதி அதிகாலை 2.10 மணி அளவில் பீளமேடு அருகே ஆவாரம்பாளையம் ரயில்வே பாலத்தின் அடியில் சென்றபோது தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த கல் மீது ரயில் மோதியதில் கல் உடைந்து சிதறியது.
இதுகுறித்து லோகோ பைலட் கோவை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சென்னை, வில்லிவாக்கத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் ரயில்வே தண்டவாளத்தில் கற்களை வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. 10ம் வகுப்பு வரை படித்துள்ள அவர், கோவை ஆவாரம்பாளையத்தில் உறவினர் வீட்டில் தங்கி வேலைக்கு சென்றுள்ளார்.
கடந்த 24ம் தேதி இரவு ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளம் அருகே இயற்கை உபாதையை கழிக்க சென்றவர் கற்களை எடுத்து தண்டவாளத்தில் வைத்து விட்டு சென்றுள்ளர். கல் வைத்த சம்பவம் மறுநாள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தவே சென்னை சென்றுவிட்டார். போலீசார் சென்னை சென்று சிறுவனை கைது செய்து கோவை அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.