சென்னை: சென்னை விமான நிலைய இயக்குனராக சி.வி.தீபக், கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியில் இருந்து வந்தார். இந்நிலையில், இவர் திடீரென டெல்லிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள மண்டல கன்ட்ரோல் ஸ்கீமிற்கு, இயக்குனராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார். வடகிழக்கு மாநிலங்களின் விமான நிலையங்களின் மண்டல நிர்வாக இயக்குனராக இருந்த எம்.ராஜா கிஷோர், சென்னை விமான நிலையத்திற்கு புதிய இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த இவர், ஏற்கனவே திருப்பதி விமான நிலையத்தில் இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி இரவு, திருவனந்தபுரத்தில் இருந்து 5 எம்பிக்கள் உள்பட சுமார் 150 பயணிகளுடன் டெல்லிக்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா பயணிகள் விமானம், நடுவானில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டு, சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்க வந்தது. ஆனால் அந்த விமானம் சென்னையில் தரை இறங்கியதில், மிகுந்த காலதாமதம் ஏற்பட்டதாக, அந்த விமானத்தில் பயணம் செய்த காங்கிரஸ் மூத்த தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கே.சி.வேணுகோபால் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, சென்னை விமான நிலையம், எங்கள் விமானத்தை உடனே தரையிறங்க செய்யாமல், நீண்ட நேரம் வானில் வட்டமடித்து பறக்க வைத்தது என்று சாட்டியதோடு, இதுகுறித்து பாராளுமன்றத்திலும் புகார் தெரிவிக்கப்போவதாக தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சென்னை விமான நிலைய இயக்குனர் தீபக், திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகயைில், நிர்வாக காரணங்களுக்காக தீபக் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதேபோல், சேலம் விமான நிலையத்திற்கு ஐ.நவ்ஷத் நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், தற்போது டெல்லியில் இந்திய விமான நிலைய ஆணைய தலைமையகத்தில், துணை பொது மேலாளராக பணிபுரிந்து வந்தவர். இதற்கான உத்தரவுகளை டெல்லியில் உள்ள இந்திய விமான நிலைய ஆணையம் வெளியிட்டுள்ளது.