Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னை விமானநிலையத்தில் மிக மெதுவாக பாதுகாப்பு சோதனை; வெளிநாட்டு விமான புறப்பாடு தாமதம்: பயணிகள் அவதி

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் பாதுகாப்பு சோதனைகள் மிக மெதுவாக நடைபெறுவதால் சிங்கப்பூர், துபாய், தாய்லாந்து, ஹாங்காங் உள்பட பல்வேறு வெளிநாட்டு விமானங்களின் புறப்பாடு நேரங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், அதில் செல்ல வேண்டிய பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.

சென்னை விமானநிலையத்தின் பன்னாட்டு முனையத்தில் இன்று காலை சிங்கப்பூர், ஹாங்காங், தாய்லாந்து, துபாய் உள்பட பல்வேறு வெளிநாடுகளுக்கு செல்லும் சர்வதேச விமானங்களின் புறப்பாட்டில் சுமார் ஒரு மணி முதல் 2 மணி நேரம் வரை தாமதம் ஏற்பட்டது. முன்னதாக, பன்னாட்டு முனையத்தில் வெளிநாடுகளுக்கு புறப்பட்டு செல்லும் பயணிகளின் கூட்டம் அதிகமிருந்ததால், அங்கு பாதுகாப்பு சோதனைகள் நடத்தும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனையிடும் பணிகளைத் தாமதப்படுத்தினர்.

இதில் பயணிகள் பாதுகாப்பு சோதனைகள் முடிந்து விமானம் ஏறுவதில் தாமதம் ஏற்பட்டதால், இன்று காலை சிங்கப்பூர், ஹாங்காங் உள்பட பல்வேறு வெளிநாடுகளுக்கு செல்லும் சர்வதேச விமானங்களின் புறப்பாட்டிலும் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதேபோல் சென்னை விமானநிலைய உள்நாட்டு முனையத்தில் புனே, ஐதராபாத், தூத்துக்குடி நகரங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்கள் சுமார் 3 மணி நேரம் வரை தாமதமாகப் புறப்பட்டு சென்றன.

ஏனெனில், வடமாநிலங்களில் கடும் மழை மற்றும் மோசமான வானிலை நிலவி வருவதால், அங்கிருந்து சென்னை வரும் விமானங்களின் வருகை தாமதம் காரணமாக, சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய உள்நாட்டு விமான சேவையிலும் தாமதம் ஏற்பட்டதாக சென்னை விமானநிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். எனினும், இதுபோன்ற விமான புறப்பாடுகளில் பலமணி நேர தாமதம் காரணமாக, அதில் செல்ல வேண்டிய பயணிகள் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் பெரிதும் அவதிப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.