சென்னை விமானநிலையத்தில் பயணிகளிடம் வாடகை கார் ஓட்டுநர்கள் கூடுதல் கட்டணம் வசூல்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் வந்திறங்கும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகளிடம், அங்குள்ள வாடகை கார் ஓட்டுநர்கள் வலுக்கட்டாயமாக கூடுதல் கட்டணம் வசூலித்து வருவது அதிகரித்து வருகின்றன. இவற்றை தடுத்து, விமானநிலைய அதிகாரிகள் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்துகின்றனர்.
சென்னை விமானநிலைய உள்நாடு மற்றும் பன்னாட்டு முனையங்களில் நாளொன்றுக்கு சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானப் பயணிகள் சென்று வருகின்றனர். இவர்களில் வருகை பயணிகள் சுமார் 30 ஆயிரம் பேர். இந்த வருகை பயணிகளில் பெரும்பாலானோர் விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்வதற்கு, அங்குள்ள வாடகை கார்களை பயன்படுத்தி வருகின்றனர். பயணிகளிடம், வாடகை கார் ஓட்டுநர்கள் வலுக்கட்டாயமாக கூடுதலாக அதிக கட்டணம் வசூலித்து வருகின்றனர் என்று அதிகளவில் புகார்கள் எழுந்துள்ளன.
சமீபத்தில் டெல்லியில் இருந்து சென்னை வந்த விமானப் பயணியிடம் மறைமலை நகர் செல்வதற்கு தனியார் வாடகை கார் டிரைவர் கூடுதலாக ரூ.300 வசூலித்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட தனியார் கால்டாக்சி நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்து, சம்பந்தப்பட்ட டிரைவர் விமானநிலைய சவாரி செய்வதற்கு ஒரு மாத தடை விதிக்கப்பட்டது. எனினும், இதுபோல் அனைத்து பயணிகளின் புகார்கள் குறித்து விமானநிலைய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுப்பது கிடையாது. இதனால் தனியார் வாடகை கார் டிரைவர்கள் வலுக்கட்டாயமாக கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்கிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் தெரிவித்தனர்.
விமானநிலைய விரிவாக்கப் பணிகள் முடிந்ததும், உள்பகுதியில் ஏற்கெனவே இருந்ததை போல் ப்ரீ-பெய்ட் டாக்சி கவுன்டர்கள் அமைக்கப்படும் என்று சென்னை விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.