சென்னை விமான நிலையம் அருகே லேசர் லைட் பயன்படுத்தினால் நடவடிக்கை பாயும்: பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை
சென்னை: சென்னை விமான நிலையம் அருகே லேசர் லைட் மற்றும் வெப்ப காற்று செலுத்தப்பட்ட பலூன்கள் பறக்கவிட சென்னை பெருநகர காவல்துறை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. சென்னை விமான நிலையம் அருகே அடிக்கடி விமான போக்குவரத்து இடையூறாக வானில் லேசர் லைட் அடிக்கப்பட்டதாக விமான ஓட்டிகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரை தொடர்ந்து சென்னை விமான நிலையம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் பொதுமக்கள் யாரும் லேசர் லைட் மற்றும் வெப்ப காற்று பலூன்கள் பறக்க விடக்கூடாது என்று சென்னை போலீஸ் கமிஷனர் அருண் அதிரடியாக உத்தரவிட்டார்.
அந்த உத்தரவை தொடர்ந்து, நேற்று முதல் வரும் செப்டம்பர் 24ம் தேதி வரையிலான 60 நாட்களுக்கு சென்னையில் குறிப்பாக விமான நிலையம் அருகே லேசர் லைட் மற்றும் வெப்ப காற்று பலூன்கள் பறக்க விட முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. போலீசாரின் இந்த தடை உத்தரவை மீறி யாரேனும் லேசர் லைட் மற்றும் வெப்பக்காற்று பலூன்கள் பறக்கவிட்டால் பிஎன்எஸ்எஸ் 163 சட்டப்படி வழக்கு பதிவு செய்து கைது செய்யப்படும் என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.