செங்டு ஓபன் டென்னிஸ்: திக்... திக்... த்ரில்லரில் மிரட்டிய அலெஜான்ட்ரோ சாம்பியன்; போராடி தோற்ற முசெட்டி
பெய்ஜிங்: செங்டு ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் நேற்று, இத்தாலியை சேர்ந்த உலகின் 6ம் நிலை வீரர் லொரென்ஸோ முசெட்டியை வீழ்த்தி, கனடாவில் பிறந்து சிலி நாட்டுக்காக ஆடிவரும் அலெஜான்ட்ரோ டேபிலோ சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். சீனாவின் செங்டு நகரில் செங்டு ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று முன்தினம் நடந்த அரை இறுதிப் போட்டி ஒன்றில் அமெரிக்க வீரர் பிரண்டன் நகஷிமாவை வீழ்த்தி, அலெஜான்ட்ரோ இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார். மற்றொரு அரை இறுதிப் போட்டியில் கஜகஸ்தான் வீரர் அலெக்சாண்டர் ஷெவ்சென்கோவை வீழ்த்தி, லொரென்ஸோ முசெட்டி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இந்நிலையில், நேற்று நடந்த இறுதிப் போட்டியில் முசெட்டியும், அலெஜான்ட்ரோவும் மோதினர். முதல் செட்டில் அற்புதமாக ஆடிய அலெஜான்ட்ரோ 6-3 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி வாகை சூடினார். ஆனால், அடுத்த செட் போட்டியில் சுதாரித்து ஆடிய முசெட்டி, 6-2 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டை எளிதில் வசப்படுத்தினார். அதனால், பரபரப்பாக துவங்கிய 3வது செட்டில் இரு வீரர்களும் சளைக்காமல் மோதினர். அதனால், டை பிரேக்கர் வரை அந்த செட் நீண்டது. இறுதியில் 7-6 (7-5) என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டை கைப்பற்றிய அலெஜான்ட்ரோ 2-1 என்ற கணக்கில் போட்டியில் வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.