Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

செங்கம் அருகே சாலையில் அதிமுகவினர் அமைத்திருந்த அலங்கார வரவேற்பு வளைவு சரிந்து எடப்பாடி மயிரிழையில் தப்பினார்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகைக்காக அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவு திடீரென சரிந்து விழுந்ததில் எடப்பாடி பழனிசாமி மயிரிழையில் உயிர் தப்பினார். தமிழ்நாடு முழுவதும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் தொடங்கி மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். 2ம் நாளான நேற்று திருவண்ணாமலையில் இருந்து காஞ்சி, புதுப்பாளையம் சாலை வழியாக செங்கம் தொகுதிக்கு சென்றார்.

அவரது வாகனத்தை பின் தொடர்ந்து 25க்கும் மேற்பட்ட கார்கள் சென்றன. எடப்பாடி வருகையை முன்னிட்டு, பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், ஆபத்தான நிலையிலும் கட்சி கொடிகள், பேனர்கள், அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், திருவண்ணாமலையில் இருந்து நேற்று மாலை செங்கத்துக்கு எடப்பாடி வேனில் சென்று கொண்டிருந்தார். செங்கம் அடுத்த புதுப்பாளையம் பகுதியில் அவரது வாகனம் சென்றபோது, சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த ராட்சத அளவிலான அலங்கார வளைவு திடீரென சரிந்து பின்னால் சென்ற பாதுகாப்பு வாகனத்தின் மீது விழுந்தது. அலங்கார வளைவை எடப்பாடி பழனிசாமியின் வாகனம் கடந்த சில நொடிகளில் அலங்கார வளைவு சரிந்து விழுந்ததால் மயிரிழையில் அவர் உயிர் தப்பினார்.

இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அந்த சாலை வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர், பிரசார பயணத்தில் பங்கேற்ற அதிமுகவினர், சாலையின் குறுக்கே சரிந்து விழுந்த அலங்கார வளைவை அப்புறப்படுத்தினர். அதைத்தொடர்ந்து அந்த வழியாக போக்குவரத்து சீரானது. நெடுஞ்சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக பேனர்கள் மற்றும் அலங்கார வளைவுகள் அமைக்க அரசு கட்டுப்பாடுகள் விதித்திருந்த நிலையிலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் அமைத்திருந்த பேனர்கள் மற்றும் அலங்கார வளைவுகளால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.