Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

செங்கல்பட்டு மாவட்டம் ஆலப்பாக்கத்தில் 55 ஏக்கரில் புதிய உயிரி தொழில்நுட்ப பூங்கா: திட்ட அறிக்கை தயார் செய்ய டிட்கோ நிறுவனம் டெண்டர்

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், ஆலப்பாக்கத்தில் 55 ஏக்கர் பரப்பளவில் புதிய உயிரி தொழில்நுட்ப பூங்காவிற்கு திட்ட அறிக்கை தயார் செய்ய டிட்கோ நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது. தமிழ்நாடு மேம்பட்ட உள்கட்டமைப்பு, தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் தளவாடத் திறன்கள் காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இந்தியாவில் ஒரு முக்கிய இடமாக திகழ்கிறது. நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கொண்ட மாநிலம் என்ற பெருமையைப் பெற்றுள்ள தமிழ்நாடு, இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகளை கொண்டுள்ளது.

ஆட்டோமொபைல்கள், விண்வெளி, மருந்துகள், ஜவுளி, மின்னணுவியல், தோல் பொருட்கள் மற்றும் ரசாயனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழ்நாடு மிகவும் பன்முகப்படுத்தப்பட்ட உற்பத்தித் துறையைக் கொண்டுள்ளது. ஹூண்டாய் மோட்டார் இந்தியா, பிஎம்டபிள்யூ மற்றும் ரெனால்ட் நிசான் போன்ற வாகன உற்பத்தியாளர்கள் மாநிலத்தில் தங்கள் தொழிற்சாலைகளை அமைத்து, இப்பகுதியில் வாகன மற்றும் துணை தொழில்களின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர். இந்தியாவில் மின்னணு உற்பத்தியில் தமிழ்நாடு 20 சதவீதத்தைக் கொண்டுள்ளது.

இதனால் ஆப்பிளின் முக்கிய ஒப்பந்த உற்பத்தியாளர்கள் தங்கள் நிறுவனங்களை இங்கு அமைத்து வருகின்றனர். இந்நிலையில், ஏற்கனவே தமிழ்நாட்டில் உயிரி தொழில்நுட்பத் தொழில்களுக்காக டைசல் உயிரி தொழில்நுட்ப பூங்கா தரமணியில் அமைந்துள்ளது. இதை தவிர, தமிழ்நாட்டில் உயிரி தொழில்நுட்பத் துறையை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், தமிழக அரசு தொழில் வளர்ச்சி நிறுவனம் மற்றும் ஒன்றிய அரசின் உயிரி தொழில்நுட்பத் துறை இணைந்து இந்த பூங்காவை அமைத்துள்ளன. அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஆலப்பாக்கத்தில் 55 ஏக்கர் பரப்பளவில் புதிய உயிரி தொழில்நுட்ப பூங்காவிற்கு திட்ட அறிக்கை தயார் செய்ய டிட்கோ டெண்டர் கோரியுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட டெண்டர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு தொழில் துறை மேம்பாட்டு கழகம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் ஆலப்பாக்கம் பகுதிகளில் அமையவுள்ள உயிரி தொழில்நுட்ப பூங்காவிற்கு விரிவான திட்ட மற்றும் செயல்வடிவ அறிக்கை தயார் செய்ய அழைப்பு விடுத்துள்ளது. இப்பூங்காவில் மருத்துவ கூட்டு ஆராய்ச்சி, மருத்துவ உயிரி தொழில்நுட்ப ஆய்வகம், தடுப்பூசிகள், பயாலஜிக்ஸ், பையோசிமிலர், கடல் உயிரியல், வேளாண் உயிரியல் உள்ளிட்டவை குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.