செங்கல்பட்டு மாவட்டத்தில் நில அபகரிப்பு, மிரட்டல் வழக்கில் போலி பத்திரிகையாளர் வராகி கைது: 22ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு
சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் நில அபகரிப்பு மற்றும் மிரட்டல் வழக்கில் போலி பத்திரிகையாளர் வராகி கைது செய்யப்பட்டார். செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தாலுகா, கழிப்பட்டூர் கிராமத்தில் உள்ள திலகவதிக்கு சொந்தமான 1.08 ஏக்கர் நிலத்தின் பொது அதிகாரம் பெற்ற சரவணன் என்பவர் அளித்த புகாரின் பேரில் செங்கல்பட்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், போலி ஆவணங்களை உருவாக்கி, ஆள்மாறாட்டம் செய்து சொத்தை அபகரித்தது தொடர்பாக 38 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் செங்கல்பட்டு மாவட்ட குற்றப் பிரிவினரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி இந்த வழக்கானது மேல்விசாரணைக்காக சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து காஞ்சிபுரம் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் திரிபுரசுந்தரி விசாரணை நடத்தினார். வழக்கின் முக்கிய குற்றவாளியான செந்தில்குமார், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
அவரை சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரணை நநடத்தினர். அதில், அவர் நில ஆவணங்களை போலியாக தயாரித்து புகார்தாரருக்கு பதிலாக வேறொரு நபரை ஆள்மாறாட்டம் செய்து அவர் பெயரில் நிலத்தை பதிவு செய்திருப்பது தெரியவந்தது. அவர் கடந்த 2020ம் ஆண்டு அந்த நிலத்தில் சுற்றுச்சுவர் எழுப்ப முயன்றபோது, வராகியை சந்திக்க அவருக்கு அழைப்பு வந்தது. செந்தில்குமார் வராகியை சந்தித்த போது வராகி அவரிடம் ரூ.1 கோடி பணம் கேட்டும், இந்த நிலத்தில் இனிமேல் எந்த பதிவும் செய்யக் கூடாது என்றும் மிரட்டியுள்ளார்.
இதற்காக வராகி தனது பெயரில் துணைப்பதிவாளர் அலுவலகத்தில் ஒரு ஆட்சேபனை கடிதத்தை அளித்துள்ளார். செந்தில்குமார் அவரது மிரட்டலால் எச்டிஎப்சி காசோலைகளில் ரூ.70 லட்சத்தை செலுத்தியுள்ளார். எனவே வராகி கடந்த 2020 அக்டோபர் 7ம் தேதி துணைப்பதிவாளர் அலுவலகத்தில் ஏற்கனவே அளித்த ஆட்சேபனை கடிதத்தை திரும்ப பெற கடிதம் அளித்துள்ளார்.
வராகி மீதான நில அபகரிப்பில் அவரது தொடர்பினை நிரூபிக்க தேவையான ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு நிலஅபகரிப்பு, மிரட்டல் போன்ற குற்றங்களுக்காக அவரை சிபிசிஐடி போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் செங்கல்பட்டு நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, வரும் 22ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இந்த வழக்கில் இதுவரை திருப்போரூர் துணை பதிவாளர் பழனிநேசன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.