Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தினமும் 265 மில்லியன் லிட்டர் விநியோகம் ரூ.66.78 கோடியில் சென்னை,புறநகருக்கு குடிநீர் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து ரூ.66.78 கோடி மதிப்பீட்டில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு கூடுதலாக 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.  கிருஷ்ணா குடிநீர் வழங்கல் திட்டத்தின் கீழ், பெறப்பட்ட தண்ணீரை சுத்திகரிப்பதற்காக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டம், செம்பரம்பாக்கத்தில் ரூ.296 கோடி மதிப்பீட்டில்,

நாளொன்றுக்கு 530 மில்லியன் லிட்டர் நீர் சுத்திகரிக்கும் நிலையம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை கொண்டு செல்லும் குழாய்கள் அமைக்கும் பணிகள் நிறைவேற்றப்பட்டு 19.7.2007ல் கலைஞர் திறந்து வைத்தார். இந்நிலையத்தின் முதல் வரிசை குழாய் மூலம் நாளொன்றுக்கு 265 மில்லியன் லிட்டர் குடிநீர் சென்னை மாநகர பகுதிகள் மற்றும் தாம்பரம் மாநகர பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

பெருநகர சென்னை வளர்ச்சிக்கேற்ப பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து முழு கொள்ளளவான 530 மில்லியன் லிட்டர் குடிநீரை வழங்குவதற்காக ரூ.66.78 கோடி மதிப்பீட்டில், செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை சந்திப்பு வரையிலான இரண்டாவது வரிசை குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் நடந்தது.

அதன்படி, செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சென்னை மாநகருக்கு கொண்டு செல்வதற்காக பிரதான குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு முதல் பகுதி சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து போரூர் வரை 11.7 கி.மீ. நீளத்திற்கு குழாய் பதிக்கும் பணிகளும், இரண்டாம் பகுதி பூந்தமல்லி புறவழிச்சாலை சந்திப்பில் இருந்து கோயம்பேடு வரை 9.2 கி.மீ. நீளத்திற்கு குழாய் பதிக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது.

இதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியின் சுத்திகரிப்பு மையத்தில் இருந்து கூடுதலாக நாளொன்றுக்கு 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இதன்மூலம், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து ஏற்கனவே தினசரி வழங்கி வந்த 265 மில்லியன் லிட்டர் குடிநீருடன், கூடுதலாக இத்திட்டத்தின் மூலம் 265 மில்லியன் லிட்டர் குடிநீர் தினசரி வழங்குவதால் நாளொன்றுக்கு 530 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கப்படும்.

இதனால் அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு மண்டலங்கள், தாம்பரம் மாநகராட்சி, குன்றத்தூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நகராட்சிகளில் உள்ள 20 லட்சம் பொதுமக்கள் பயன் பெறுவர். பல்வேறு நீர்நிலைகள் மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களின் மூலம் சென்னை மாநகருக்கு நாளொன்றுக்கு 1180 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வரும் நிலையில், செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கூடுதலாக நாளொன்றுக்கு 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

* ‘சென்னை குடிநீர் செயலி’

சென்னை குடிநீர் வாரியம், பொதுமக்களின் குறைகள் மற்றும் புகார்களை விரைவாக நிவர்த்தி செய்ய ‘சென்னை குடிநீர் செயலி’ என்ற புதிய கைபேசி செயலினை வடிவமைத்து மக்களின் பயன்பாட்டிற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இந்த செயலி புகைப்படங்களுடன் பதிவு செய்யும் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இச்செயலி மூலம், பொதுமக்களால் பதிவு செய்யப்படும் புகார்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்ட புவியியல் தகவல் அமைப்பின் மூலம் தானாகவே கணினி வழியாக பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட உதவி பொறியாளருக்கு குறுஞ்செய்தி மற்றும் வாட்ஸ்அப் வாயிலாக அனுப்பப்படும். மேலும், புகார் பதிவு செய்த நபருக்கு உடனடியாக உறுதிப்படுத்தல் குறுஞ்செய்தியும் அனுப்பப்படும்.

புகாரின் நிலை குறித்து பொதுமக்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். மேலும், புகார்களை இணையதளம், மின்னஞ்சல், முதன்முறையாக 8144930308 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் பேஸ்புக், எக்ஸ் தளம் போன்ற சமூக வலைதளங்கள் மற்றும் க்யூஆர் கோடு மூலமும் பதிவு செய்யலாம். செல்போனில் இந்த செயலிலை பதிவிறக்கும் செய்யலாம்.