சென்னை: மலேசியாவை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ஐ.ஜீ குளோபல் பிலிம்ஸ் நிறுவனம் சென்னை எழும்பூர் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 2 மனுக்கள் தாக்கல் செய்திருந்தது. அவற்றில், தங்கள் நிறுவனத்தின் மூலமாக இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் திரைப்படங்களை வாங்கி வெளியிட ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது.
இதையடுத்து, தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது வியாபார தேவைகளுக்காக தங்கள் நிறுவனத்திடம் இருந்து பல்வேறு தவணைகளில் சுமார் 26 கோடி ரூபாய் கடன் பெற்றது. கடன் தொகைக்காக தங்கள் நிறுவனத்திற்கு தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வழங்கிய காசோலைகள் வங்கியில் பணமில்லாமல் திரும்பி வந்தது.
எனவே, காசோலை மோசடி சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு சென்னை எழும்பூர் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் நீதிமன்றத்தில் யாரும் ஆஜராகாததால், இந்த நிறுவனத்தின் உரிமையாளர் என்.ராமசாமிக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டார்.