Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புரட்டாசி மாத வைணவ கோயில் ஆன்மிக பயணம்: ஆணையர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்

சென்னை: புரட்டாசி மாத வைணவ கோயில் ஆன்மிக பயணத்தை திருவல்லிக்கேணியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மானசரோவர் மற்றும் முக்திநாத் ஆகியவற்றிற்கு ஆன்மிக பயணம் சென்று வருபவர்களுக்கு ஆண்டுதோறும் மானியம் வழங்கப்பட்டு வருவதோடு, ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கும், புரட்டாசி மாதத்தில் வைணவ கோயில்களுக்கும், ராமேசுவரத்திலிருந்து காசிக்கும், அறுபடை வீடுகளுக்கும் பக்தர்கள் கட்டணமில்லாமல் ஆன்மிக பயணமாக அழைத்து செல்லப்பட்டு வருகின்றனர்.

2025-26ம் நிதியாண்டிற்கான சட்டமன்ற மானிய கோரிக்கையில், புரட்டாசி மாதத்தில் பிரசித்தி பெற்ற வைணவ கோயில்களுக்கு ஆண்டுதோறும் 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்ட 1,000 பக்தர்களை ஆன்மிக பயணமாக அழைத்து செல்லும் திட்டம் கடந்தாண்டு முதல் அரசு நிதி மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டு அரசு நிதியில் 2,000 பக்தர்கள் வைணவ கோயில்களுக்கு ஆன்மிக பயணம் அழைத்து செல்லப்படுவர்.

இதற்கான செலவினத்தொகை ரூ.50 லட்சம் அரசு நிதியாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதை நிறைவேற்றிடும் வகையில் முதற்கட்டமாக, நேற்று இந்து சமய அறநிலைய துறை ஆணையர் ஸ்ரீதர், 70 பக்தர்களுக்கு பயண வழி பைகளையும், கோயில் பிரசாதங்களையும் வழங்கி ஆன்மிக பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேலும், காஞ்சிபுரம், விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மண்டலங்களிலிருந்து 500 பக்தர்கள் அந்தந்த பகுதியில் அமைந்துள்ள முக்கிய வைணவ கோயில்களுக்கு ஆன்மிக பயணமாக அழைத்து செல்லப்பட்டனர்.

பக்தர்களுக்கு கோயில்களில் சிறப்பு தரிசனம் செய்து வைக்கப்பட்டு கோயில் பிரசாதம், காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவும் வழங்கப்பட்டது. நிகழ்வில் கூடுதல் ஆணையர் மங்கையர்க்கரசி, சிறப்பு பணி அலுவலர் லட்சுமணன், இணை ஆணையர்கள் வான்மதி, ரேணுகாதேவி, கோயில் துணை ஆணையர்/செயல் அலுவலர் சி.நித்யா, உதவி ஆணையர் பாரதிராஜா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.