மதுரை: அழகர்கோயிலில் ஆக.9ம் தேதி நடைபெறும் தேரோட்டத்திற்கு முழுவீச்சில் தேர் தயாராகி வருகிறது. மதுரை அருகே, அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயிலில் ஆடி பெருந்திருவிழா கடந்த ஆக.1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் அன்ன வாகனம், சிம்ம வாகனம், அனுமார் வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சுந்தரராஜப் பெருமாள் எழுந்தருளி கோயில் உள்வளாகத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 4ம் நாளான இன்று கருட வாகனத்தில் எழுந்தருளி சுவாமி காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் மற்றும் பதினெட்டாம்படி கதவுகள் திறப்பு ஆக.9ம் தேதி நடைபெற உள்ளது. அன்று காலை 8.40 மணிக்கு மேல் 8.55 மணிக்குள் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு மேல் பதினெட்டாம்படி கதவுகள் திறக்கப்பட்டடு படிபூஜைகள் நடைபெற்று சந்தனம் சாற்றும் நிகழ்வு நடைபெறுகிறது. ஆக.9ம் தேதி தேரோட்டம் நடைபெறுவதையொட்டி தேர் முழுவீச்சில் தயாராகி வருகிறது. குறிப்பாக தேர் சக்கரங்கள் சரிபார்த்தல், தேரில் கட்டைகள் அடுக்குதல், வடக்கயிறு பொருத்துதல், வர்ண கொடை பொருத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஆடி திருவிழாவையொட்டி கோயில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது.