Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பிள்ளையார்பட்டியில் தேரோட்டம்

திருப்புத்தூர்: விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பிள்ளையார்பட்டியில் தேரோட்டம் தொடங்கியது. சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே, பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர்கோயிலில், விநாயகர் சதுர்த்தி திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் காலை, மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் சுவாமி ஊர்வலம் வந்து அருள்பாலித்தார். கடந்த 23ம் தேதி அசுரனை வதம் செய்யும் கஜமுக சூரசம்ஹாரம் நடந்தது. விழாவின் 9ம் நாளான இன்று மாலை தேரோட்டம் தொடங்கியது. இதையொட்டி அதிகாலையில் கோயிலில் இருந்து கற்பக விநாயகர் திருத்தேரில் எழுந்தருளினார்.

மூலவருக்கு பக்தர்கள் அருகம்புல் மாலை அணிவித்தும், அர்ச்சனை செய்தும் வழிபட்டனர். ஆண்டுக்கு ஒருமுறை விநாயகர் சதுர்த்தி விழாவில் மட்டும் சந்தனக்காப்பு அலங்காரத்தில் மூலவர் காட்சியளிப்பார். அதன்படி இரவு 10 மணி வரை சந்தனக்காப்பு அலங்காரத்தில் மூலவர் காட்சியளிக்க உள்ளார். மாலை 4.40 மணியவில் தேரோட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது, பெரிய தேரில் விநாயகரும், சிறிய தேரில் சண்டிகேஸ்வரரும் எழுந்தருளுனார். சண்டிகேஸ்வரர் தேரை பெண்கள் வடம் பிடித்து இழுப்பது சிறப்பு. இரவில் சுவாமி யானை வாகனத்தில் வீதி உலா வருவார். விழாவின் 10வது நாளான நாளை (ஆக.27) காலை 9.30 மணியளவில் கோயில் குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. மதியம் உச்சிகால பூஜையில் மூலவருக்கு ராட்சத கொளுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெறும். நாளை இரவில் பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா நடைபெறும்

பலத்த போலீஸ் பாதுகாப்பு

தேரோட்டத்தை முன்னிட்டு, சிவகங்கை மாவட்ட எஸ்பி சிவபிரசாத் தலைமையில் 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோயிலுக்கு செல்லும் பக்தர்களை கிழக்கு கோபுர வாயில் மற்றும் சிறப்பு தரிசன வாயிலில் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்த பிறகே போலீசார் அனுமதிக்கின்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர்கள் காரைக்குடி சித.பழனியப்பச் செட்டியார், நச்சாந்துபட்டி மு.குமரப்பச் செட்டியார் ஆகியோர் செய்துள்ளனர். விழாவையொட்டி மதுரை, சிவகங்கை, காரைக்குடி உள்ளிட்ட நகரங்களில் இருந்து பிள்ளையார்பட்டிக்கு அரசு சார்பில் சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.