முருகனுக்கு அரோகரா கோஷம் முழங்க திருப்பரங்குன்றத்தில் மகா கும்பாபிஷேகம்: 2 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு
திருப்பரங்குன்றம்: முருகனுக்கு அரோகரா கோஷம் விண்ணைப் பிளக்க திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நேற்று நடந்தது. இதில் 2 லட்சம் பக்தர்கள் பங்கேற்றனர்.
முருகனின் முதல் படை வீடு என்ற பெருமை பெற்ற, திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் 13 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த பிப்ரவரி மாதம் திருப்பணிகள் துவங்கின. ராஜகோபுரம், கோயில் மண்டபங்கள், வண்ணம் பூசுதல், பரிவார தெய்வங்கள், தூண்கள் சிற்பங்கள் மற்றும் மூலவர் உள்ளிட்ட சன்னதிகளில் திருப்பணிகள் கடந்த 6 மாதமாக நடைபெற்று நிறைவடைந்தது. இதையடுத்து உபகோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகத்துக்காக கடந்த 10ம் தேதி முதலாவது யாகசாலை பூஜை துவங்கியது. தொடர்ந்து யாக சாலை பூஜைகள் நடந்த நிலையில், நேற்று முன்தினம் 6 மற்றும் 7ம் கால யாகசாலை பூஜைகள் சிறப்பாக நடந்தன. கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று அதிகாலை 3 மணிக்கு மங்கள வாத்தியம், வேத பாராயணம், திருமுறை பாராயணம் நடைபெற்றது. தொடர்ந்து 3.30 மணிக்கு எட்டாம் கால யாகசாலை பூஜை துவங்கி மஹா பூர்ணாஹூதியுடன் நிறைவடைந்தது. பின்னர் காலை 4 மணிக்கு யாகசாலையில் இருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட தங்க, வெள்ளி குடங்களில் இருந்த புனித நீரை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து வந்து, 7 நிலை கொண்ட 125 அடி உயர ராஜகோபுரத்தை அடைந்தனர்.
பின்னர் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி முன்னிலையில், அதிகாலை 5.30 மணிக்கு திருப்பரங்குன்றம் சன்னதி தெரு, ரத வீதிகள், கிரிவலப்பாதை உள்ளிட்ட இடங்களில் கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்களின் முருகனுக்கு அரோகரா கோஷத்துடன் ராஜகோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
அதே நேரத்தில் கோவர்த்தனாம்பிகை, பசுபதீஸ்வரர், வல்லப கணபதி ஆகிய விமானங்கள் மற்றும் பெரிய மணி, கல்யாண விநாயகர் ஆகிய இடங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் 6 மணிக்கு மூலவர் சன்னதியில் சுப்பிரமணியசுவாமிக்கு மஹா தீபாராதனை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து காலை 7.30 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்காக நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து நடை சாத்தாமல் இரவு 9 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் கோயில் கோபுரம், முகப்புகள், அங்குள்ள தெருக்கள், உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு திருப்பரங்குன்றம் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. மேலும் கோயில் முகப்பில் வண்ண மலர்களால் தோரணங்கள் கட்டப்பட்டுள்ளது.
கோயிலுக்குள் உள்ள ஆஸ்தான மண்டபம், கம்பத்தடி மண்டபம், திருவாச்சி மண்டபம், மூலவர் சன்னதி ஆகிய இடங்களில் 2000 கிலோ வண்ண மலர்களால் தோரணங்கள், அலங்கார மாலைகள் கட்டப்பட்டிருந்தது. கும்பாபிஷேக நிகழ்வில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் வரை பங்கேற்றனர். 15க்கும் மேற்பட்ட இடங்களில் 5 லட்சம் பேர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகம் நடைபெற்ற பின்னர் 10 டிரோன்கள் மூலம் அங்கிருந்த பக்தர்களின் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. கிரி வீதி உட்பட 26க்கும் மேற்பட்ட இடங்களில் வைக்கப்பட்ட மெகா சைஸ் எல்இடி திரைகளில் பக்தர்கள் கும்பாபிஷேகத்தை கண்டு வணங்கினர்.
பக்தர்கள் இளைப்பாற பள்ளிவாசல் திறப்பு
கும்பாபிஷேகத்திற்கு வந்த இந்து பக்தர்களுக்கு திருப்பரங்குன்றம் சிக்கந்தர் பாதுஷா தர்ஹா மற்றும் பள்ளிவாசல் நிர்வாகம் சார்பாக உணவு, குளிர்பானங்கள் வழங்கப்பட்டன. மேலும் பக்தர்கள் உணவு சாப்பிடுவதற்காகவும், வெயிலில் இளைப்பாறுவதற்காகவும் பள்ளிவாசல் திறந்து விடப்பட்டது. இந்துக்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக பள்ளிவாசலில் ஒன்று கூடி உறவாடியது அப்மதநல்லிணக்கத்தை பறைசாற்றும் விதமாக அமைந்திருந்தது.
தமிழில் குடமுழுக்கு சிறப்பு அமைச்சர் சேகர்பாபு பெருமிதம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அளித்த பேட்டி: திருப்பரங்குன்றத்தில் தேவாரம் திருமுறை பண்ணிசை இசைக்க ஓதுவார்கள், பெண் ஓதுவார்கள் பங்கேற்க, தமிழ் முறைப்படி குடமுழுக்கு நடைபெற்றது மகிழ்ச்சி தருகிறது. லட்சக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷங்களுடன் ஏழு நிலை ராஜகோபுரம், விநாயகர், அம்பாள் உள்ளிட்ட சன்னதிகளுக்கு குடமுழுக்கு வெகுசிறப்பாக நடைபெற்றது. டிரோன்கள் மூலம் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது.
தமிழக முதல்வரின் திராவிட மாடல் ஆட்சியில்தான், தமிழ் கடவுள் முருகனுக்கு குடமுழுக்கு இவ்வளவு சிறப்பாக நடந்துள்ளது. அறம் சார்ந்த திருப்பணிதான் இறைப்பணி என்பதை எடுத்துக் கூறுகின்ற வகையில், அரசியலுக்கு அப்பாற்பட்டு இனத்தால், மதத்தால், மொழியால் மக்களை பிளவுபடுத்துகின்ற சக்திகளுக்கு இடையே, அவரவர் விரும்புகின்ற இஷ்ட தெய்வங்களை அமைதியான முறையில் வணங்கும் வகையில், சட்டம், ஒழுங்கை பாதுகாத்து எடுத்துக்காட்டான முறையில் திருப்பரங்குன்றம் குடமுழுக்கை சிறப்புடன் நடத்தியுள்ளோம். 48 நாட்கள் மண்டல பூஜை என்ற கணக்கில், பக்தர்கள் அவசரமின்றி பொறுமையுடன் வந்து தரிசனம் செய்யலாம். இதுவரை 3,347 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு கண்டுள்ளோம். அறுபடை வீட்டிற்கும் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம். திராவிட மாடல் ஆட்சி வந்த பிறகு, 124 முருகன் கோயில்களில் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.