சிக்கலான வருமான வரிச் சட்டத்தில் மாற்றம்; 2026 பிப். 26 முதல் புதிய சட்டம் அமல்: சாமானிய மக்களுக்கு புரியும் வகையில் சொற்கள் மாற்றம்
புதுடெல்லி: சாமானிய மக்களுக்கு புரியும் வகையில் எளிமையான மொழியில் புதிய வருமான வரிச் சட்டத்தை அடுத்தாண்டு பிப்ரவரி முதல் நடைமுறைக்கு கொண்டு வருவதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. கடந்த 1961ம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்தை எளிமையாகவும், தெளிவாகவும் மாற்றியமைக்க உள்ளதாக, கடந்த 2024 ஜூலை பட்ஜெட்டில் ஒன்றிய அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து, புதிய வருமான வரி மசோதா, 2025, பிப்ரவரி 13ம் தேதி மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மசோதாவை ஆய்வு செய்ய, பாஜக எம்.பி பைஜயந்த் பாண்டா தலைமையில் 31 பேர் கொண்ட நாடாளுமன்றத் தேர்வுக் குழு அமைக்கப்பட்டது. இக்குழு தனது பரிந்துரைகளுடன் ஜூலை 21ம் தேதி அறிக்கையைத் தாக்கல் செய்தது.
அதன் அடிப்படையில், பழைய மசோதா திரும்பப் பெறப்பட்டு, சில திருத்தங்களுடன் புதிய மசோதா மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்காக, மசோதா அறிமுகம் செய்யப்பட்ட பிப்ரவரி 13ம் தேதியே, புதிய விதிகள் மற்றும் படிவங்களை எளிமைப்படுத்த பிரத்யேகக் குழுவும் அமைக்கப்பட்டு, பொதுமக்களிடம் இருந்து ஆயிரக்கணக்கான ஆலோசனைகளைப் பெற்று மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்த புதிய சட்டம் குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் உறுப்பினர் ஆர்.என். பர்பத் கூறுகையில், ‘புதிய சட்டத்தில் உள்ள கடுமையான சட்டச் சொற்கள் நீக்கப்பட்டு, அட்டவணை வடிவங்கள் மற்றும் எளிய மொழி பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம், சாதாரண வரி செலுத்துவோர் கூட சட்ட விதிகளை எளிதாகப் புரிந்துகொண்டு தங்கள் உரிமைகளைத் தெரிந்துகொள்ள முடியும். இதனால் வருமான வரிதொடர்பான வழக்குகள் பெருமளவில் குறையும். டிஜிட்டல் சொத்துக்கள் மற்றும் ஆன்லைன் ஆதாரங்களைச் சேகரிப்பது தொடர்பான அதிகாரங்கள் ஏற்கெனவே இருந்தாலும், தற்போது இந்தச் சட்டத்தில் அவை தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன’ என்றார். இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய விதிகள் மற்றும் படிவங்கள் அனைத்தும் தயாராகிவிடும் என்றும், இந்த புதிய சட்டம் அடுத்தாண்டு பிப்ரவரி 26ம் தேதி அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.