Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

1967, 77 போன்று மாற்றம் வருமா? விஜய் 2026 தேர்தலுக்கு பிறகு சினிமாவிற்கு தான் செல்வார்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சென்னை: அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு மீண்டும் சினிமாவுக்குத்தான் செல்வார் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார். சென்னை பெரம்பூரில் கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூடம், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி திருவிக நகர் மற்றும் பெரியார் நகர் புதிய பேருந்து நிலையம், சேத்துப்பட்டில் கட்டப்பட்டு வரும் நவீன சலவைக் கூடம் அமைக்கும் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை பெருநகர் வளர்ச்சி குழும தலைவருமான பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார்.

இதில், சென்னை மேயர் பிரியா, சி.எம்.டி.ஏ உறுப்பினர் செயலர் பிரகாஷ், மாநகராட்சி துணை ஆணையர் கௌஷிக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் பேருந்து நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் கடந்த ஆட்சியில் துவங்கப்பட்டாலும் அடிப்படை வசதிகளை கணக்கிடாமல் இருந்தது. ஆனால், தற்போது அடிப்படை வசதிகள் கணக்கிடப்பட்டு பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

செங்கல்பட்டில் மிகப்பெரிய பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டு வருகிறது. மகாபலிபுரத்தில் பேருந்து நிலையம் வடிவமைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. ஆவடியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. பெரியார் நகர், திரு.வி.க.நகர் பேருந்து நிலையங்களை செப்டம்பர் முதல் வாரத்தில் முதல்வர் திறந்து வைக்க உள்ளார். குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.

முடிச்சூர் பேருந்து நிலையம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. அதை விரைவுபடுத்த எங்களது சட்டப் பிரிவிடம் பேசியுள்ளோம். விரைவில் அதற்கு ஒரு முடிவை ஏற்படுத்துவோம். ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்றுதான் அந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. இப்பொழுது அதை பயன்பாட்டிற்கு கொண்டு வர மறுக்கிறார்கள். குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வரும்போது இதற்கெல்லாம் முற்றுப் புள்ளி ஏற்படும்.

கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகளை விரைவுபடுத்த தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் எங்கள் செயலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ரயில் நிலையத்திற்கு உண்டான தொகை ரூ.20 கோடி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் வழங்கியுள்ளது. அந்த பணி விரைவுபடுத்தப்பட்டு, செப்டம்பர் மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவோம் என்று உறுதி அளித்துள்ளனர்.

நாங்கள் யாரையாவது கூட்டணிக்கு வா, வா என்று அழைக்கிறோமா, இல்லை அவர்களது கூட்டணியில் உள்ள யாரையாவது விமர்சனம் செய்கிறோமா, எடப்பாடி மைக்கை பிடித்தாலே கம்யூனிஸ்ட்களை விமர்சனம் செய்வது, விசிகவை வா, என்று சொல்வது என்று தேடித்தேடி அழைத்துக் கொண்டிருக்கிறார். புலிக்கு பயந்தவன்தான் தன் மேல் படுத்துக்கொள், தன் மேல் படுத்துக்கொள், என்று கூறுவான். பல்டி பழனிசாமி தினமும் ஒன்று பேசிக் கொண்டிருக்கிறார்.

எங்கள் கூட்டணி கொள்கை சார் கூட்டணி, சந்தர்ப்பவாத கூட்டணி கிடையாது. இந்த கூட்டணியை தலைமை தாங்கும் முதல்வரை கூட்டணி கட்சிகள் நம்புகின்றன. மக்கள் நல பணியில் ஒன்றியத்தில் முதன்மையாக இருக்கிறார் முதலமைச்சர். 2026ம் ஆண்டு மீண்டும் கிரீடத்தை சூட மக்கள் தயாராக இருக்கிறார்கள். இவ்வாறு கூறினார்.

மேலும், 1967, 77 போன்று 2026ல் மாற்றம் வரும் என்ற விஜய்யின் பேச்சு குறித்த கேள்விக்கு, ‘நிச்சயமாக மாற்றம் வரும். இன்றைக்கு அரசியலில் வருகிறோம் என்று சொன்னவர் 2026க்கு பிறகு நான் சினிமாவிற்கு செல்கிறேன் என்ற மாற்றத்தை ஏற்படுத்துவார். ஓட்டு என்ற மகத்தான சக்தி மக்களிடம் உள்ளது. அந்த மகத்தான சக்தி எங்கள் முதலமைச்சரின் பக்கம் உள்ளது. நிச்சயம் வென்று காட்டுவோம் என்றார்.