Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சமஸ்கிருதத்தில் மாற்றம் செய்து கொண்டுவரப்பட்டுள்ள 3 குற்றவியல் சட்டங்களின் பெயர்கள் ஆங்கிலத்தில் மாற்றக் கோரி வழக்கு: ஒன்றிய அரசு பதில் தர சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மூன்று குற்றவியல் சட்டங்களின் பெயர்கள் சமஸ்கிருத மொழியில் மாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஒன்றிய அரசு பதில் தருமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டம், குற்ற விசாரணை முறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டங்களுக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷிய அதினியம் என்ற பெயரில் மூன்று புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு அவை ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.

இந்தி மற்றும் சமஸ்கிருதத்தில் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த சட்டங்களை அரசியல் சட்டத்துக்கு விரோதமானவை என்று அறிவிக்கக் கோரி தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில், நாட்டில் உள்ள 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில் ஒன்பது மாநிலங்களிலும், இரு யூனியன் பிரதேசங்களிலும் மட்டும்தான் இந்தி அலுவல் மொழியாக உள்ளது. மொத்த மக்கள் தொகையில் 43.63 சதவீதம் மக்கள் மட்டுமே இந்தியை தாய்மொழியாகக் கொண்டவர்கள்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும். வேறு மொழிகளில் சட்டம் இயற்ற நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கவில்லை. இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவுகளுக்கு எதிராக இந்தியில் பெயரிடப்பட்டுள்ள மூன்று சட்டங்களையும் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று அறிவித்து, ஆங்கிலத்தில் பெயர் வைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது ஷபிக் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஒன்றிய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், மூன்று சட்டங்களும் ஆங்கிலத்தில் தான் நிறைவேற்றப்பட்டன. சட்டங்களின் பெயர்கள் கூட ஆங்கில எழுத்துக்களில் தான் இடம் பெற்றுள்ளன. இந்த சட்டங்கள், அரசியலமைப்பு சட்ட விதிகளை மீறவில்லை. எவரின் அடிப்படை உரிமையும் இதனால் பாதிக்கப்படவில்லை. சட்டங்களுக்கு பெயர் சூட்டும் விவகாரம் என்பது நாடாளுமன்றத்தின் விருப்பம். இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று விளக்கமளித்தார். இதையடுத்து, இந்த மனுவுக்கு ஜூலை 23ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு ஒன்றிய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.