Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாற்றம் உருவாகட்டும்

நாடாளுமன்ற தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு தமிழகம், புதுச்சேரியில் நாளை நடக்கிறது. பொதுவாக, தேர்தல் காலங்களில் தலைவர்களின் பரப்புரைகளை சூறாவளி, அனல் பறக்கும் பிரசாரம் என குறிப்பிடுவார்கள். ஆனால், இம்முறைதான் உண்மையிலேயே அனல் பறக்கும் பிரசாரம் நிகழ்ந்தது என கூறலாம். காரணம், தமிழகம் முழுவதும் வெப்பநிலை வழக்கத்தை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகரித்திருந்தது. இந்த சூழலிலும் தலைவர்கள், வேட்பாளர்களின் பிரசாரம் தொய்வின்றி நடந்தது பாராட்டிற்குரியது.

தமிழக தேர்தல் களத்தை பொறுத்தவரை கூட்டணி பேச்சு, ஒப்பந்தம், சீட்கள் ஒதுக்கீடு, பிரசார வியூகம் என அனைத்திலுமே, திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சிறப்பாக செயல்பட்டது. மேலும், கூட்டணிக்கட்சிகளை முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அரவணைத்து சென்றார். இதற்கு முக்கிய சான்றாக தனது முதல் பிரசார பொதுக்கூட்டத்தையே கூட்டணி கட்சியான மதிமுக போட்டியிடும் திருச்சி தொகுதியில்தான் முதல்வர் துவக்கினார். தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

திமுக அரசின் சாதனை திட்டங்கள், ஒன்றிய பாஜ அரசின் 10 ஆண்டு கால ஆட்சியில் உள்ள அவலங்கள், அதற்கு தங்களது ஆட்சிக்காலங்களிலும், அதற்கு பின்பும் ஆதரவு தந்த அதிமுகவின் தவறுகளையும் சுட்டிக்காட்டி அவர் பேசிய விதம் தமிழக வாக்காளர்களை வெகுவாக கவர்ந்தது. அதேநேரம் அதிமுக, பாஜ, பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியதில் இருந்தே, பலவிதமான குழப்பங்கள் நிலவின. இவர்களது பிரசாரங்களிலும் ஒருவர் மீது ஒருவர் மாறி குற்றம் சுமத்துவதிலேயே குறியாக இருந்தனர்.

அதிலும் கூட ஒரு நாகரிகம் கடைபிடிக்கப்படவில்லை. அதிமுக, பாஜ கூட்டணி கட்சி தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர், சிங்கம், சிறுத்தை, ஆட்டுக்குட்டி, நாய், ஓநாய், பச்சோந்தி என விலங்குகள் மற்றும் உயிரினங்களோடு, ஒருவரை ஒருவர் ஒப்பிட்டு பேசிக் கொண்ட சம்பவமும் அரங்கேறின. இவற்றையெல்லாம் மக்கள் கேட்க வேண்டிய தர்மசங்கட சூழலும் ஏற்பட்டது. சுமார் 25 நாட்களாக தமிழகத்தில் நடந்த பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைநகர் சென்னை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் தங்களது இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தை நேற்றுடன் நிறைவு செய்தனர்.

தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும், நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கே துவங்குகிறது. தமிழகத்தை பொறுத்தவரை, 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் மூலம் தொடர் விழிப்புணர்வு செய்யப்பட்டது. ‘வாக்களிப்பது என் உரிமை’ என்பதை மனதில் கொண்டு, பொதுமக்கள் தங்களது வாக்களிக்கும் ஜனநாயக உரிமையை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, நாளை எந்தவித தயக்கமுமின்றி வாக்களித்து, ‘இந்தியாவில்’ மாற்றத்தை உருவாக்குவோம்.