ஒரே நாளில் 2 முறை அதிரடி மாற்றம் தங்கம் பவுனுக்கு ரூ.1120 எகிறியது: போட்டிப்போட்டு வெள்ளியும் உயர்ந்தது
சென்னை: தங்கம் விலை நேற்று காலை, மாலை என ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1120 அதிகரித்தது. இதேபோல, வெள்ளியும் போட்டிப் போட்டு உயர்வை சந்தித்தது. தங்கம் விலை கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வரலாறு காணாத வகையில் உயர்ந்து வந்தது. இதன் ஒரு பகுதியாக கடந்த மாதம் 17ம் தேதி ஒரு பவுன் ரூ.97,600க்கு விற்பனையாகி வரலாற்று உச்சத்தை பதிவு செய்தது. தொடர்ந்து, இந்த மாதத்தில் தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது.
தொடர்ந்து, நேற்று முன்தினம் தங்கம் விலை குறைந்தது. நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.11,180க்கும், பவுனுக்கு ரூ.560 குறைந்து ஒரு பவுன் ரூ.89,440க்கும் விற்றது. தொடர்ந்து 2 நாளில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,360 வரை குறைந்தது நகை வாங்குவோருக்கு ஆறுதலை அளித்தது. இந்நிலையில், நேற்று மீண்டும் விலை உயர்ந்தது. காலையில் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,250க்கும், பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு பவுன் ரூ.90 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
இதேபோல நேற்று காலை வெள்ளி விலையும் உயர்ந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 164 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 64 ஆயிரம் ரூபாய்க்கும் விற்றது. நேற்று மாலையும் தங்கம், வெள்ளி விலையில் அதிரடி மாற்றம் காணப்பட்டது. நேற்று மாலை தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,320க்கும், பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு பவுன் ரூ.90,560க்கும் விற்கப்பட்டது.
ஒரே நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1120 அதிகரித்தது நகை வாங்குவோரை மீண்டும் கலக்கமடைய செய்துள்ளது. அதே நேரத்தில் நேற்று மாலையில் வெள்ளியும் போட்டி உயர்ந்தது. கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.165க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் அதிகரித்து, பார் வெள்ளி 1 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
