பிரதமர் கடந்த 26, 27ம் தேதி தமிழகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க திறப்பு விழா, கங்கைகொண்டசோழபுரத்தில் ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்றார். 2 விழாக்களிலும் வேட்டி, துண்டு அணிந்து தன்னை தமிழ் உணர்வாளராகவே காட்டிக் கொண்டார். இது மகிழ்ச்சியான செய்தி தான். அதேநேரம் அந்த உணர்வானது தமிழ் மொழியின் பெருமை, பாரம்பரியத்தை உயர்த்தி பிடிப்பதிலோ அல்லது தமிழர்கள் மீது உண்மையான அக்கறை காட்டுவதிலோ இருப்பதில்லை என்பதுதான் கவலையளிக்கிறது.
ஆண்டுக்கு ஒருமுறையேனும் ராமேஸ்வரம் வந்து தரிசனம் செய்து செல்லும் பிரதமர் மோடி, அப்பகுதி மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்படுவதை கண்டும்காணாமல் இருப்பது ஏன் என்று புரியவில்லை? நேற்று முன்தினம் கூட ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளை சேர்ந்த 14 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். இலங்கை அதிபரின் இந்திய பயணத்தில் கூட மீனவர்கள் சிறை பிடிப்பதை தடுக்கும்விதமான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவில்லை. ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் அன்னிய செலவாணியை ஈட்டித்தருவதில், இந்திய அளவில் முதலிடம் வகிக்கும் தமிழக மீனவர்கள் கண்ணீர் கடலில் மிதப்பதை தடுக்க உரிய பேச்சுவார்த்தை நடத்தாதது ஏன்?
கீழடியில் ஒன்றிய அரசு சார்பில் நடந்த முதலிரண்டு அகழாய்வில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிய வகை தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த அகழாய்வு மூலம் தமிழர்களின் நகர நாகரீகம் சுமார் 2,600 ஆண்டுகளுக்கும் முற்பட்டது என்ற உண்மையும் வெளிப்பட்டது. இதை பொறுக்காத ஒன்றிய அரசு இப்பணிகளை தலைமையேற்று நடத்திய தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவை வடமாநிலத்திற்கு அதிரடியாக மாற்றியது. இவரது முதல்
2 கட்ட அகழாய்வுக்கான 982 பக்க அறிக்கையில் திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு கூறி ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியது.
அதேநேரம் கீழடியில் ஒன்றுமே இல்லை எனக்கூறிய 3ம் கட்ட அகழாய்வு மேற்கொண்ட ஸ்ரீராமன் என்பவரிடம் அறிக்கை கோருகிறது ஒன்றிய அரசு. மேலும், இந்திய தொல்லியல் துறை கடந்த 5 ஆண்டுகளில் அகழாய்வு பணிகளுக்கான மொத்த நிதியில் 25 சதவீதமான ரூ.8.53 கோடியை குஜராத் மாநிலத்திற்காக மட்டும் செலவிட்டுள்ளது. அதேநேரம் தமிழகத்திற்கு 9.8 சதவீதம் மட்டுமே செலவிட்டுள்ளது. சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில், மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில், பணிகளை தொடர்வதில் இழுத்தடிப்பு.
தமிழகத்தில் 2015ல் ஒப்புதல் அளித்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் தற்போதுதான் துவக்கக் கட்டத்தையே எட்டி நடந்து வருகிறது. தேசிய கல்விக் கொள்கையில் கையெழுத்திடாத காரணத்திற்காக, தமிழகத்திற்கான கல்வி நிதி ரூ.2,151 கோடியை ஒன்றிய அரசு இதுவரை விடுவிக்கவில்லை. தமிழக மாணவர்களின் எதிர்காலத் தேவைக்கான நிதியை நிறுத்தி வைப்பது, எந்த மாதிரியான அரசியல் பார்வை என்பதை ஒன்றிய பாஜ அரசுதான் விளக்க வேண்டும்.
பேரிடர் நிதியை தர மறுத்தது மற்றும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை புறக்கணித்தது என பாஜ அரசு மறைமுகமாக அல்ல.... நேரடியாகவே தமிழக மக்களை வஞ்சித்து வருகிறது. அதேநேரம் தமிழக வருகையின்போது மட்டும், ஆடை மாற்றத்தில் பிரதமர் மோடி காட்டி வரும் தமிழ் உணர்வை, நம் மாநில மக்கள் மீதும் காட்ட வேண்டும். மாநில அரசின் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். அந்த மாற்றம்தான் அவசியம்... ஆடை மாற்றம் வெறும் ஏமாற்றமே...