சந்திரசேகர ராவ், ராமாராவ் கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்படுவார்கள்: எம்எல்சி பதவியை ராஜினாமா செய்த கவிதா பரபரப்பு பேட்டி
திருமலை: தெலங்கானா முன்னாள் முதல்வரும் பிஆர்எஸ் கட்சி தலைவருமான சந்திரசேகர ராவின் மகள் எம்எல்சி கவிதா அவரது சகோதரர் ராமராவ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதை தொடர்ந்து பிஆர்எஸ் கட்சி தலைவர்கள் ஊழலில் ஈடுபட்டதாக கவிதா வௌிப்படையாக குற்றச்சாட்டினார். இந்நிலையில் கவிதாவின் நடவடிக்கைகள் கட்சிக்கு விரோதமாக இருக்கிறது என கட்சியின் தலைமை அவரை நேற்றுமுன்தினம் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்தது.
தன் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்ததற்கு முன்னாள் நீர்பாசன துறை அமைச்சர் ஹரிஷ் ராவ் தான் காரணம் என்று கவிதா குற்றம் சாட்டினார். பின்னர் நேற்று நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார்.
அப்போது கவிதா கூறியதாவது:
விரைவில் சந்திரசேகரராவ், ராமாராவை, ஹரிஷ் ராவ் கட்சியை விட்டு ஒதுக்கி வைத்துவிடுவார். காலேஸ்வரம் வழக்கில் ஹரிஷ் ராவ் பெரிய மோசடி செய்தார். அந்தப் பணத்தில் அவர் எம்எல்ஏ வேட்பாளர்களுக்கும் நிதியளித்தார். கே.டி.ராமாராவை தோற்கடிக்க ஹரிஷ் ராவ் ₹60 கோடி செலவு செய்தார். ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு ரேவந்த் ரெட்டிக்கு ஹரிஷ் ராவ் நெருக்கமாக உள்ளார். இவ்வாறு அவர் கூறினார். இதனைதொடர்ந்து பி.ஆர்.எஸ் கட்சி உறுப்பினர் பதவியிலிருந்தும் எம்.எல்.சி பதவியிலிருந்தும் கவிதா விலகினார். தனது ராஜினாமா கடிதத்தை கட்சி தலைமைக்கும், சட்டமேலவை தலைவருக்கும் அனுப்பினார்.