சென்னை: தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. 42 வயதாகும் இவர் இதுவரை திருமணம் செய்யாமல் சிங்கிளாகவே இருக்கிறார். இவரது திருமணம் குறித்து பல்வேறு வதந்திகள் வந்த நிலையில், அதற்கான நேரம் இன்னும் வரவில்லை, சரியான நபரைக் கண்டுபிடித்தால் திருமணம் செய்து கொள்ளத் தயாராக இருப்பதாக அண்மையில் பேசியிருந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக தனது நீண்ட கால நண்பரும் சண்டிகரைச் சேர்ந்த தொழிலதிபருமான ஒருவரை திரிஷா திருமணம் செய்ய உள்ளதாக தகவல் பரவி வருகிறது. மேலும், பல ஆண்டுகளாக இரு குடும்பங்களும் நெருங்கிய நட்புடன் இருந்த நிலையில் தற்போது திருமண பந்தத்தில் இணையவிருப்பதாகவும் தகவல் பரவியது. தற்போது இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் திரிஷா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது பதிவில், ‘‘எனக்கு பதிலாக என் வாழ்க்கையை மற்றவர்கள் தீர்மானிப்பது எனக்கு பிடிக்கும். அடுத்து எனது ஹனிமூனை திட்டமிடுவார்கள் என்று ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார். திரிஷாவின் இந்த அதிரடி பதில் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
+
Advertisement