டோக்கியோ: உலக தடகள சாம்பியன்ஷிப் உயரம் தாண்டுதல் போட்டியில் நேற்று, இந்திய வீரர் சர்வேஷ் குஷாரே, 4வது சுற்றில் தோற்று 6ம் இடம் பிடித்தார். உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பானின் டோக்கியோ நகரில் நடந்து வருகின்றன. உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்க முதல் இந்திய வீரராக சர்வேஷ் குஷாரே தகுதி பெற்றிருந்தார். நேற்று நடந்த போட்டியில், 2.20 மீட்டர் உயரத்தை முதல் ரவுண்டில் அவர் தாண்டினார். பின் 2.24 மீட்டர் உயரத்தை 2வது முயற்சியிலும், அடுத்து, 2.28 மீட்டர் உயரத்தை முதல் முயற்சியிலும் தாண்டினார்.
2.28 மீட்டர் உயரம் தாண்டுதல், சர்வேஷின் தனிப்பட்ட சாதனையாக அமைந்தது. அதைத் தொடர்ந்து, 2.31 மீட்டர் உயரம் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதில், 3 முயற்சிகளிலும் சர்வேஷ் தோல்வியை தழுவினார். 13 பேர் பங்கேற்ற இப்போட்டியில், சர்வேஷ் 6ம் இடம் பிடித்தார். நியூசிலாந்து வீரர் ஹமிஷ் கெர், 2.36 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். தென் கொரியா வீரர் சாங்கியோக் வூ, 2.34 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் பெற்றார். செக் குடியரசு வீரர் ஜேன் ஸ்டெபலா 2.31 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலம் பெற்றார்.