Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சாம்பியன் அரசு

தூங்கா நகரம் எனப்படும் மதுரையை மையமாக கொண்டு மத துவேஷத்திற்கு திரியிடும் முயற்சிகளை பாஜ மற்றும் இந்து அமைப்புகள் தற்போது மேற்கொண்டு வருகின்றன. மதசார்பின்மைக்கு பெயர்போன தமிழ்நாட்டில் எப்படியாவது ஒரு மதக்கலவரத்தை ஏற்படுத்தி, ஆட்சிக் கட்டிலை கைப்பற்ற பாஜவின் பாசங்குகள் இம்முறையும் எடுபடவில்லை. மதுரை மக்களுக்கு வளர்ச்சி அடிப்படையில் துரும்பைக் கூட கிள்ளிப் போடாத பாஜ, இப்போது திருப்பரங்குன்றம் தீபத்திற்காக மலைக்கும், ஐகோர்ட்டுக்கும் பயணிப்பதை பார்த்தால், அதன் வேகம் ஆச்சரியப்பட வைக்கிறது.

அயோத்தியில் ராமர் கோயிலை முன் வைத்து இந்தியாவில் மெல்ல மெல்ல கிளை பரப்பிய பாஜவிற்கு, இப்போதும் தமிழகமும், கேரளாவும் முடவனின் கைக்கு எட்டாத கொம்புத்தேனாக இருக்கின்றன. எப்படியாவது தங்கள் மதவாத பருப்பை மக்கள் மத்தியில் வேக வைத்திட வேண்டும் என்ற வெறியில் இப்போது தீபத்தை முன்னிறுத்தி அரசியலை பாஜ மேற்கொண்டு வருகிறது. வளர்ச்சி அரசியல் என்பது பாஜவிற்கு எப்போதும் பழக்கப்பட்டதல்ல.

தமிழகத்தில் எப்படியாவது காலூன்ற நினைக்கும் பாஜ, திராவிட மாடல் ஆட்சியிடம் சில பாடங்களை கற்றுக் கொள்வது நல்லது. மதுரையில் நடந்த அரசு விழாவில் நேற்று மட்டுமே 1.41 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. ரூ.36 ஆயிரத்து 660 கோடி முதலீட்டிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. தமிழர்களின் பண்பாடு, கலாசாரம் தோய்ந்த ஓவியங்களால் நிரம்பிய வீரமங்கை வேலுநாச்சியார் பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

முதலீட்டின் முதல் முகவரியாக தமிழ்நாட்டை மாற்றி, வெளிநாட்டு முதலீடுகளை எல்லாம் இங்கு ஈர்த்து வர முதல்வர் கொண்டு வரும் நடவடிக்கைகள் எல்லாம் பொதுமக்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தின் மனிதவள திறன், உள்கட்டமைப்புகள், பொருளாதார வளர்ச்சி மேம்பட்டு வருகிறது. மதுரைக்கு கோயில் நகரம் என்ற பெருமை மட்டும் போதாது.

அதை தொழில் நகரமாகவும் மாற்றுவோம் என திமுக அரசின் செயல்பாடுகள் மெச்சத்தக்க வகையில் உள்ளன. விருதுநகரில் உருவாகி வரும் ஜவுளி பூங்காவால் ஒரு லட்சம் பேருக்கு வேலை உத்தரவாதம் தரப்பட்டுள்ளது. இத்தகைய வளர்ச்சி பணிகளில் எதிலுமே பங்கெடுக்காத பாஜ, இப்போது புளித்து போன மத அரசியலை முன்னிறுத்தி, மதுரையில் தன்னை வளர்த்துக் கொள்ள முற்படுவது வேடிக்கையிலும் வேடிக்கை.

தூங்கா நகரத்தில் வசிக்கும் மக்கள் அனைவரும் எப்போதும் விழிப்புணர்வுடன் இருப்பர். கீழடியில் தமிழர்களின் தொன்மை நாகரீகத்தை மறைக்க பாஜ எவ்வளவு முயன்றாலும் அது எடுபடாமல் போனது. கீழடியின் அடிச்சுவடுகள் முழுமையாக கண்டறியப்பட்டால், இந்திய வரலாற்றையே தமிழகத்தில் இருந்து எழுத தொடங்க வேண்டும். இந்நிலையில் இத்தகைய தூங்கா நகரின் வரலாற்று சிறப்பு மிக்க பக்கங்களை விடுத்து, பாஜ வழக்கம்போல் மத அரசியலை முன்னெடுப்பது துரதிர்ஷ்டம்.

தமிழக முதல்வரே சொல்வது போல் வன்முறை அரசியலை முன்னெடுத்தால், பொதுமக்கள் பாஜவின் புடதியில் அடித்து விரட்டுவர். தென்மாவட்டங்களுக்கான திராவிட மாடல் அரசின் வளர்ச்சி திட்டங்களை சகித்துக் கொள்ளாமல் பாஜவினர் வீசும் பந்துகள் எல்லாம் திராவிட ஆட்சி எனும் பேட்டில் பட்டு சிக்சர்களாக மாறி வருகின்றன. போட்டி எப்படியிருப்பினும் திராவிட மாடல் அரசே சாம்பியன் பட்டத்தை வெல்லப்போகிறது. மதுரை மக்கள் பாஜவின் தலையில் ஓங்கி குட்டப்போகும் காலம் இன்னும் 5 மாதங்களில் வருகிறது.