Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சவால்களை எதிர்கொண்டால்தான் சாதனை கிடைக்கும்! :இயற்கை உழவரின் சாகுபடி அனுபவங்கள்

எந்தவொரு தொழிலும் சவால்கள் நிறைந்ததுதான். விவசாயம் மட்டும் விதிவிலக்கா? அதிலும் இயற்கை விவசாயத்தில் பல தடைகளைக் கடக்க வேண்டி இருக்கும். அதையெல்லாம் கடந்து, ரசாயனத்தைத் தவிர்த்து மண்ணைச் செழிப்பாக்கினால் அது நமக்கு பொன் போன்ற விளைச்சலை நிச்சயம் கொடுக்கும் என்கிறார் செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரம் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி மோகன். கடந்த 13 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து வரும் மோகனின் அனுபவங்களை அறிய அவர் விவசாயம் செய்து வரும் விளைநிலம் அமைந்துள்ள வில்லியம்பாக்கம் கிராமத்திற்குச் சென்றோம். வயலில் அறுவடைப் பணியில் பிசியாக இருந்தபோதும் நம்மிடம் சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

``தாத்தா காலத்தில் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தோம். அப்போது 100 ஏக்கரில் பிரம்மாண்டமாக விவசாயம் நடக்கும். குடும்பமே சேர்ந்து அனைவரும் விவசாயம் செய்வோம். ஆனால் மூன்றரை ஏக்கர் மட்டுமே என்னிடம் இருக்கிறது. இதில்தான் இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறேன். நான் எப்போது தனியாக விவசாயம் செய்யத் தொடங்கினேனோ, அப்போதிருந்தே இயற்கை விவசாயத்தில் இறங்கிவிட்டேன். இந்த நிலத்தில் கடந்த 13 வருடங் களாக தொடர்ச்சியாக இயற்கை விவசாயம் செய்து வருகிறேன்.

இயற்கை விவசாயத்தைக் கையில் எடுக்கும்போது மிகவும் சவாலான விசயம் என்னவென்றால் நிலத்தை விவசாயத்திற்கு பழக்குவதுதான். ரசாயன உரங்களுக்கு பழக்கப்பட்ட மண்ணை எந்தக் கலப்பின உரங்களும் இல்லாமல் இயற்கை முறைக்கு கொஞ்சம் கொஞ்சமாக பழக்கப்படுத்தினேன். இதனால் ஆரம்பத்தில் சில வருடங்கள் நஷ்டம் மட்டுமே வரும் என தெரிந்திருந்தும் துணிந்து இறங்கினேன். முதலில் சணப்பை, தக்கைப்பூண்டு போன்ற பசுந்தாள் உரப்பயிர்களின் விதைகளை விதைத்து நிலத்திலேயே மடக்கி உழுதேன். இவ்வாறு செய்வதால் மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் பெருகும். உழவு செய்யும்போது நிலத்தை நன்றாக உழுது மண்ணில் உள்ள இறுக்கத்தைக் குறைப்பேன். கடைசி உழவுக்கு முன்பாக மண்ணில் தொழுஉரம் கொட்டி மீண்டும் உழுவேன். பின்பு நிலத்தை சரிசெய்து நாற்றுகளை நடத்தொடங்குவேன்.

இதுவரை எனது நிலத்தில் கருப்புக்கவுனி, தூயமல்லி, மாப்பிள்ளை சம்பா, தங்கச்சம்பா போன்ற ரகங்களைப் பயிரிட்டிருக்கிறேன். இப்போது அறுவடை செய்வது மைசூர் மல்லி ரகம். இந்த ரகங்கள் அனைத்துமே 5 மற்றும் 6 மாதப்பயிர்கள். மைசூர் மல்லியை நடவு செய்வதற்கு நான் பழைய நடவு முறையை பின்பற்றினேன். அதாவது ஒற்றை நாற்று நடவுமுறையில் நடவு செய்தேன். சாதாரணமாக ஒரு ஏக்கரில் நாற்று நடுவதற்கு 30ல் இருந்து 40 கிலோ வரை விதைநெல் தேவைப்படும். ஆனால் இந்த நடவு முறையில் ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ விதைதான் தேவைப்பட்டது. நல்ல இடைவெளியில், ஒரு நாற்று மட்டுமே வைத்து இதனை நடவு செய்தேன். இந்த முறையில் நடவு செய்யும்போது மண்ணில் உள்ள சத்துக்கள் முழுமையாக அனைத்து நாற்றுகளுக்கும் செல்லும். அதேசமயம் காற்றோட்டம் இருக்கும்போது நாற்றின் வேர்கள் நன்றாக மண்ணிற்குள் சென்று வளர்ச்சி அடையும்.

15 நாட்களுக்கு ஒருமுறை கட்டாயமாக களை எடுப்பேன். மீன் அமிலம், பஞ்சகவ்யம் போன்ற வளர்ச்சி ஊக்கிகளை நானே தயாரித்து பாசன நீரில் கலந்து கொடுப்பேன். எந்த விதமான ரசாயன உரமோ, பூச்சிக்கொல்லியோ பயன்படுத்த மாட்டேன். ஆரம்பத்தில் நான் இயற்கை விவசாயம் செய்தபோது ஒரு ஏக்கருக்கு 80 கிலோ அளவிலான 8 மூட்டை நெல்தான் மகசூலாக கிடைத்தது. அதைத்தொடர்ந்து அடுத்தடுத்த வருடங்களில் 15, 20 என விளைச்சல் அதிகரித்தது. மண்ணும் முழுமையாக இயற்கை விவசாயத்திற்கு ஏற்றாற்போல் மாறியது. இப்படி, தொடர்ந்து 13 வருடங்கள் இயற்கை விவசாயம் செய்ததன் பயனாகத் தற்போது ஏக்கருக்கு 45 மூட்டை வரை நெல் மகசூல் கிடைக்கிறது. இயற்கை விவசாயம் செய்ய களம் இறங்கும்போது, எடுத்த உடனேயே லாபம் கிடைக்காது. மண் செழித்து, நுண்ணுயிர்கள் பெருகும் வரை காத்திருந்தால் நல்ல வருமானம் பார்க்கலாம்’’ என்கிறார் விவசாயி மோகன்.

தொடர்புக்கு:

மோகன்: 73738 71888.

ஏக்கருக்கு 45 மூட்டை நெல்மணிகளை மகசூலாக பெறும் மோகன், அதை அரிசியாக மாற்றுகையில் 28 மூட்டை கிடைக்கிறது. அந்த அரிசியை 25 கிலோ கொண்ட மூட்டைகளாக மாற்றி, ஒரு மூட்டை ரூ.1700 என வாடிக்கையாளர்களிடம் நேரடியாக விற்பனை செய்து விடுகிறார்.

பொதுவாக அரிசியை மூட்டையில் கட்டி வைக்கும்போது வண்டு, புழு போன்றவை அரிசியைத் தின்பதற்காக வரும். இவ்வாறு வண்டு, புழுக்கள் வராமல் இருக்க மோகன் ஒரு டெக்னிக்கைக் கடைபிடிக்கிறார். அதாவது மூட்டை பிடிக்கும்போது அதனுள் வசம்பு வைத்து விடுவாராம். வசம்பு வாசத்திற்கு எந்தப் புழுவும் வண்டும் அரிசியை அண்டாது என்கிறார்.