சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் திருப்பதியில் பிரமோற்சவம் நிறைவு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவத்தின் நிறைவு நாளான நேற்று காலை தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரமோற்சவம் கடந்த மாதம் 24ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் காலை மற்றும் இரவில் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத மலையப்பசுவாமி பல்வேறு வாகனங்களில் வலம் வந்து அருள்பாலித்தனர். முக்கிய நிகழ்ச்சியான கருடசேவை உற்சவம் கடந்த மாதம் 28ம்தேதி நடந்தது. 8ம் நாளான நேற்று முன்தினம் பக்தர்கள் வெள்ளத்தில் மகா தேரோட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் பிரமோற்சவத்தின் நிறைவு நாளான நேற்று காலை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை ஸ்ரீ தேவி, பூதேவி சமேத மலையப்பசுவாமியும், சக்கரத்தாழ்வாரும் ஊர்வலமாக வராக சுவாமி கோயிலுக்கு வந்தனர். அங்குள்ள மண்டபத்தில் ஸ்ரீ தேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்பசுவாமிக்கும், சக்கரத்தாழ்வாருக்கும் பால், தயிர், தேன், இளநீர், சந்தனம் உள்பட பல்வேறு சிறப்பு பொருட்கள் மூலம் திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து ஏழுமலையான் கோயில் தெப்பக்குளத்தில் (புஷ்கரணி) சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது.
பின்னர் மலையப்பசுவாமிக்கும், சக்கரத்தாழ்வாருக்கும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதைதொடர்ந்து ஆயிரக்கணக்காண பக்தர்கள் புனித நீராடினர். சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரிக்கு பிறகு தெப்பக்குளத்தில் புனித நீராடினால் சகல பாவங்களும், தோஷங்களும் விலகி கஷ்டங்கள் தீரும் என்பது ஐதீகம். தொடர்ந்து நேற்று இரவு ஏழுமலையான் கோயில் முன் உள்ள தங்க கொடிமரத்தில் இருந்து கருடன் கொடி இறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அறங்காவலர் குழுதலைவர் பி.ஆர். நாயுடு, செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால், இணை செயல் அதிகாரி பிரம்மம், துணை செயல் அதிகாரி லோகநாதம் உள்பட பலர் பங்கேற்றனர்.
* 5.80 லட்சம் பேர் தரிசனம் ரூ.25.12 கோடி காணிக்கை
திருப்பதி பிரமோற்சவத்தில் 5.80 லட்சம் பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்து, உண்டியலில் ரூ.25.12 கோடி காணிக்கையாக செலுத்தி உள்ளனர். 26 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது. 2.42 லட்சம் பக்தர்கள் தலைமுடி காணிக்கையாக செலுத்தி மொட்டையடித்து கொண்டனர். 28 லட்சத்திற்கும் மேற்பட்ட லட்டுகள் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. பிரமோற்சவத்தில் 60 டன் பூக்கள், 4 லட்சம் ரோஜா பூக்கள், 90 ஆயிரம் பருவகால பூக்கள் பயன்படுத்தப்பட்டு அலங்கரிக்கப்பட்டது.
* ஆழ்வார்கள் வேடம் அணிந்து வந்த வடகலை பிரிவினர்
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவத்தின் 7ம் நாளான கடந்த 1ம் தேதி இரவு சந்திர பிரபை வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. அப்போது இந்து தர்ம பிரசார பரிஷத் சார்பில் திருப்பதியை சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள் 12 ஆழ்வார்களுடன் கிருஷ்ணதேவராயர் வேடமணிந்து பங்கேற்றனர். ஆழ்வார்கள் அனைவரும் தென்கலை நடைமுறை கொண்டவர்கள், ஆனால் வீதி உலாவில் பங்கேற்ற மாணவர்கள் வடகலை நாமத்துடன் ஆழ்வார் வேடத்தில் வீதி உலாவில் பங்கேற்றனர். இந்த விவகாரம் வீதி உலாவில் பங்கேற்ற தென்கலை நடைமுறை கடைப்பிடிக்கும் வைணவர்கள் மட்டுமின்றி ஜீயர்களுடன் மாட வீதியில் நான்காயிரம் திவ்ய பிரபந்தம் பாடியபடி பங்கேற்ற சீடர்களும் அதிருப்தி அடைந்தனர். இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி உள்ளனர்.