சிஎப் மோட்டோ நிறுவனம், 450எம்டி என்ற அட்வஞ்சர் டூரர் மோட்டார் சைக்கிளை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. எதிர்வரும் பண்டிகை சீசனில் இது சந்தைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே அறிமுகம் ஆக வேண்டிய இது, 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்படுத்தும் வகையில் இன்ஜின் தயாரிப்பது தொடர்பான ஒன்றிய அரசின் கொள்கை முடிவு காரணமாக, சந்தைப்படுத்தப்படும் தேதி தள்ளிப் போனது. எனினும் பண்டிகை சீசனுக்குள் இது விற்பனைக்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மோட்டார் சைக்கிளில் 449 சிசி பேரலல் டிவின் லிக்விட் கூல்டு மோட்டார் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 8,500 ஆர்பிஎம்-ல் 44 பிஎச்பி பவரையும், 6,250 ஆர்பிஎம்-ல் 44 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். உதிரி பாகங்களாக இறக்குமதி செய்து இந்தியாவில் சந்தைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், எந்த நிறுவனம் இந்திய நிறுவனம் இதனை சந்தைப்படுத்தும் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.
புதிய ஜிஎஸ்டி விகிதங்களின்படி, இது 40 சதவீத பிரிவில் வருகிறது. சர்வதேச சந்தை விலையுடன் ஒப்பிடுகையில் சுமார் ரூ.3.99 லட்சம் என நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மோட்டார் சைக்கிள், கேடிஎம் 390 அட்வஞ்சர், ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450, பிஎம்டபிள்யூ எப்450ஜிஎஸ் ஆகிவற்றுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.