அர்ச்சகர், ஓதுவார், தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சிப் பள்ளிகளில் பயின்ற 108 மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்கள்: அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்
சென்னை; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் கோயில்கள் சார்பில் நடத்தப்படும் அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளில் 2024- 25 ஆம் கல்வியாண்டில் ஓராண்டு அர்ச்சகர் பயிற்சி முடித்த 2 பெண்கள் உள்பட 89 மாணவர்கள், ஓதுவார் பயிற்சி பள்ளிகளில் மூன்றாண்டு ஓதுவார் பயிற்சி முடித்த 12 மாணவர்கள், தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சி பள்ளியில் மூன்றாண்டு பயிற்சி முடித்த 7 மாணவர்கள் என ஆக மொத்தம் 108 மாணவர்களுக்கு அதற்கான சான்றிதழ்களை வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, அர்ச்சகர் பயிற்சி பள்ளி, ஓதுவார் பயிற்சி பள்ளி, தவில் மற்றும் நாதஸ்வரம் பயிற்சி பள்ளி, வேத ஆகம பாடசாலைகள், 4000 திவ்ய பிரபந்தம் பயிற்சி பள்ளிகள் என 21 பயிற்சி பள்ளிகள் மேம்படுத்தப்பட்டு, இந்த பயிற்சி பகுதிகளுக்கு உண்டான தகுதியுள்ள ஆசிரியர்கள் நியமிக்கபட்டு, தொடர்ந்து இந்த பயிற்சி பள்ளிகள் சிறப்போடு திராவிடமான வளர்ச்சியுடன் நடத்தப்பட்டு வருகின்றன.இந்த பயிற்சி பணியுடைய ஆரம்பகால ஊக்கத் தொகை ரூ.500 என்று 2007 ஆம் ஆண்டில் இருந்ததை, 2021 ஆம் ஆண்டு வரை வெறும் ரூ.1000 என்ற அளவில்தான் வழங்கியிருந்தது.
முதல்வர் பொறுப்பேற்றவுடன், 2021–22 ஆம் ஆண்டில், முழுநேர பயிற்சி பள்ளியில் பயில்கின்ற மாணவச் செல்வங்களுக்கு ரூ.3000 மற்றும் பகுதிநேர பயிற்சி பள்ளியில் பயில்கின்ற மாணவச் செல்வங்களுக்கு ரூ.1500 ஊக்கத் தொகையாக அறிவித்தார். அடுத்த ஆண்டான 2023-இல், அந்த ரூ.3000 ஊக்கத் தொகையை ரூ.4000 ஆகவும், ரூ.1500ஐ ரூ.2000 ஆகவும் உயர்த்தி அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டு, இந்த பயிற்சி பள்ளியில் பயில்கின்ற மாணவர்களுக்கு உணவு, சீருடை, தங்குமிட வசதியோடு, முழுநேர பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு ரூ.10,000 பகுதிநேர மாணவர்களுக்கு ரூ.5,000 அன்று வழங்கி உள்ளார். இந்த பயிற்சி பணியில் பயில்கின்ற மாணவச் செல்வங்களுக்கு இன்றுவரை வழங்கப்பட்ட சான்றிதழ்கள் எண்ணிக்கை — 2021 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 213 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
இதோடு மட்டுமல்லாது, ஓதுவார்கள் நியமனம் — இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை 43 ஓதுவார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் பெண் ஓதுவார்கள் மட்டும் 12 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதை பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறோம். இந்த பயிற்சி பள்ளிகளை மேலும் விரிவுபடுத்தவும், மாணவச் செல்வங்களுக்கு பணியிடங்களை ஏற்படுத்தவும், பல்வேறு நீதிமன்றப் போராட்டங்களுக்கு பிறகு ஆகம திருக்கோயில்களை நிர்ணயிக்க உடைய குழுக்களின் இறுதி வடிவம் உச்சநீதிமன்ற தீர்ப்பால் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், ஆகமக் குழுவான ஐவர் குழுவின் கூட்டம், இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் அலுவலகத்தில் விரைவில் நடைபெற இருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, இதுவரை 3,707 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை ஜனவரி மாதத்திற்குள் 4,000 என்பதைத் தொடும் என்று நம்பிக்கை உள்ளது. நில மீட்பு குறித்து எடுத்துக்கொண்டால், இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு, ரூ.8,015.80 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனுடன், இந்து சமய அறநிலைத்துறை நிலங்களை அடையாளப்படுத்தும் பணிக்காக “HRCE” என்ற எல்லைக் கற்கள் பதிக்கப்படும் பணிகள் துவக்கப்பட்டு, இதுவரை 1,41,820 எல்லைக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இந்த எல்லைக் கற்கள் பதிக்கப்பட்ட இடங்களின் பரப்பளவு — 2,15,385 ஏக்கர் நிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்தந்த இடங்களில், எந்த திருக்கோயிலுக்குச் சொந்தமானது, பரப்பளவு, கோயிலின் பெயர் ஆகியவை அடங்கிய பதாகைகள் நட்டு, பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்த துறையில், ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோயில்களுக்காக, இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு, ரூ.425 கோடி அரசு மானியம் வழங்கப்பட்டுள்ளது. அதனுடன் உபயநிதி ரூ.140 கோடி அளவிற்கு பெற்றுள்ளோம். இதன் மூலம், 507 கோயில்கள் ஆயிரம் ஆண்டுகள் கோயில்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் 67 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடந்துள்ளது. இந்த செயல்பாடுகள் மூலமாக, தமிழகத்தில் திருக்கோயில்கள் பாதுகாக்கப்பட்டு, தமிழர் கலாச்சாரம், தமிழர் கலை மற்றும் வழிபாட்டு மரபுகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள், ஆயிரம் ஆண்டுகள் பழமையான 100 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெறும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த செயல்பாடுகளை புத்தக வடிவில் வெளியிட அரசு திட்டமிட்டுள்ளது.
உபயதாரர்கள் நிதி இதுவரை ரூ.1200 கோடி அளவிற்கு திருக்கோயில்களுக்கு உபயதாரர்கள் நிதி பெற்றிருக்கின்றனர். இந்த ஆட்சி தான், உபயதாரர்கள் நிதியை முழுமையாக, அவர்கள் விருப்பப்படி, கோயில் வளர்ச்சிக்கு பயன்படுத்தும் ஆட்சி என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். பக்தர்களுக்கான வசதிகள் மருத்துவ சேவை, உணவுக்கூடங்கள், தங்குமிடம், விருந்து மண்டபங்கள், முடி காணிக்கை மண்டபங்கள், போக்குவரத்து வசதி, தெப்பத் திருவிழாக்கள் போன்றவை ஒருங்கிணைக்கப்பட்டு, வரலாறு காணாத அளவிற்கு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டங்களில் அமைச்சர் துறை செயலாளர் அன்பிற்கினிய மணிவாசகம், ஆணையாளர் ஸ்ரீதர், கூடுதல் ஆணையாளர்கள் பழனி, கவிதா, ஜெயராமன், லட்சுமணன், ஹரிப்பிரியா, வான்மதி ஆகியோர் சிறப்பாக ஒத்துழைத்து வருகிறார்கள்.
அதேபோல், மாங்காடு, கபாலீஸ்வரர், பார்த்தசாரதி திருக்கோயில்களின் பட்டாச்சாரியார் மற்றும் குருக்கள் ஆகியோருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், கூடுதல் ஆணையர்கள் சி.பழனி, திருமதி சி.ஹரிப்ரியா, மா.கவிதா, பொ.ஜெயராமன், சி.கல்யாணி, சிறப்புப் பணி அலுவலர் சி.லட்சுமணன், இணை ஆணையர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.