மத்திய கைலாஷ் சந்திப்பில் கட்டப்பட்டு வரும் எல்-வடிவ மேம்பாலம் அக்டோபரில் திறப்பு: நெடுஞ்சாலைத்துறை உயரதிகாரி தகவல்
சென்னை: மத்திய கைலாஷ் சிக்னல் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க கட்டப்பட்டு வரும் எல்-வடிவ மேம்பாலம் வரும் அக்டோபர் மாதம் திறக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கையால் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் வகையில் சென்னையில் பல்வேறு இடங்களில் மேம்பாலங்கள், 6 வழிச்சாலையாக மாற்றும் பணிகளில் நெடுஞ்சாலைத்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி சென்னை மாநகரில் மத்திய கைலாஷ் சந்திப்பு ஓஎம்ஆர் மற்றும் இசிஆர் சாலையை இணைக்கிறது. இந்த சாலைகளில் ஐடி நிறுவனங்கள் அதிகளவில் உள்ளதால் எப்போதும் பரபரப்பாக காணப்படுகிறது.
இதனால் மத்திய கைலாஷ் சந்திப்பில் இருந்து ஓஎம்ஆர், இசிஆர் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருப்பதால் வாகனங்கள் கடந்து செல்ல 20 முதல் 30 நிமிடங்களுக்கு மேலாகிறது. இதனால் அந்த சாலைகளில் காலை மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் என்பதால் இந்திரா நகர் சிக்னல் முதல் சர்தார் வல்பாய் பட்டேல் சாலை சந்திப்பில் உள்ள மேம்பாலம் அருகில் வரை ரூ.49.50 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. எனவே சர்தார் பட்டேல் சாலையில் ஏற்படும் நெரிசலை குறைக்க கிண்டி, சைதாப்பேட்டை மற்றும் கோட்டூர்புரத்தில் இருந்து செல்லும் வாகனங்கள், மத்திய கைலாஷ் சந்திப்பு சிக்னலில் நிற்காமல் செல்லும் வகையில் மேம்பாலம் கட்டப்படுகிறது.
சர்தார் வல்லபாய் பட்டேல் மற்றும் ராஜீவ் காந்தி சாலையில் இரண்டு வழித்தட மேம்பாலம் கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை கடந்த 2023ம் ஆண்டு தயார் செய்யப்பட்டன. அதன்படி மேம்பாலம் கட்டுமான பணிக்கு ரூ.31.44 கோடியும், மழைநீர் வடிக்கால்வாய், நடைபாதை அமைக்க ரூ.5 கோடியும், வழிக்காட்டி பலகை வைக்க ரூ.40 லட்சம், காம்பவுண்ட் சுவர் அமைக்க ரூ.35 லட்சம், மேம்பாலத்தில் விளக்குகள் வைக்க ரூ.50 லட்சம், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்க ரூ.5 லட்சம், மரங்கள் வைக்க ரூ.3 லட்சம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த மேம்பால கட்டுமானத்தின் முக்கிய பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளது. அதன்படி கிட்டத்தட்ட 70 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளதாக நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நெடுஞ்சாலை துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்: ராஜிவ் காந்தி சாலையில் ஏற்படும் 60 சதவீத போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மேம்பாலம் கட்டுமான பணிகள் நடக்கிறது. இது தற்போதுள்ள காந்திமண்டபம் மேம்பாலத்தில் இருந்து 350 மீட்டர் தொலைவில் உள்ள இடத்தில் இருந்து புறப்பட்டு ஓஎம்ஆர் சாலையில் தரையிறங்கும். கோட்டூர்புரத்தில் இருந்து செல்லும் வாகனங்கள் புதிய மேம்பாலத்தை பயன்படுத்த வேண்டும் என்பதாற்காக 350 மீட்டரிலிருந்து மேம்பாலம் தொடங்குகிறது.
மேலும் சாலையின் இருபுறமும் சர்வீஸ் லேன் அமைக்க தேவையான 5 மீட்டர் அளவிற்கான நிலங்கள் கையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் காந்தி மண்டபம் அருகில் உள்ள தேவாலயம் பகுதியில் 5 மீட்டர் நீளத்திற்கு நிலம் கையப்படுத்தப்பட்டு சாலையும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. எல்-வடிவ மேம்பாலத்திற்கான தூண்கள் அமைப்பது உள்ளிட்ட முக்கியமான பணிகள் முடிந்துள்ளது. 70 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. செப்டம்பர் மாதம் இறுதிக்குள் அனைத்து பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி 650 மீட்டர் நீளமுள்ள இந்த மேம்பாலம் வரும் அக்டோபர் மாதம் பயன்பாட்டிற்கு திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மேம்பால கட்டுமான பணிகள் முடிவடையும் நிலையில் பொதுமக்கள் சாலைகளை கடப்பதற்காக கேந்தர் வித்யாலயா பள்ளி முதல் கஸ்தூரிபா நகர் ரயில் நிலையம் வரை நடைமேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.