Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருப்பூர் பஸ் நிலையத்தில் வீட்டை விட்டு வெளியேறும் குழந்தைகளை மீட்க மையம்

திருப்பூர் : திருப்பூர் கலைஞர் மத்திய பஸ்நிலையத்தில் வீட்டை விட்டு வெளியேறிய குழந்தைகளை மீட்க உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் இது திறக்கப்பட இருக்கிறது.

திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப்ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.

இந்த தொழிலாளர்களுக்கு உணவு தங்குமிடம், வாகன வசதி போன்றவை நிறுவனங்கள் சார்பில் செய்து கொடுக்கப்படுகின்றன. இதனால் இதில் தங்கியிருந்து பலரும் வேலை செய்து வருகிறார்கள். திருப்பூரில் எப்போதும் வேலைவாய்ப்பு இருந்து வருவதால் தினமும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து பலரும் வந்து கொண்டிருக்கிறார்கள்.

தொழில்துறையினரும் தொழிலாளர்கள் பற்றாக்குறையாக இருந்து வருவதால், உடனே அவர்களை வேலைக்கு சேர்த்து விடுகிறார்கள்.இதனால் திருப்பூரில் ரயில்நிலையம் மற்றும் பஸ்நிலையங்கள் எப்போதும் பரபரப்பாக இருக்கும்.

இதற்கிடையே வீடுகளில் இருந்து பல்வேறு காரணங்களால் வெளியேறி வருகிற சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் வருகிற முதல் மாவட்டமாக திருப்பூர் தான் இருந்து வருகிறது. ஏனென்றால் எளிதாக வேலை கிடைக்கும் என்பதால், தங்கள் ஊரில் இருந்து திருப்பூருக்கு வந்து விடுகிறார்கள். இவ்வாறு வருகிறவர்களை மீட்க குழந்தைகள் பாதுகாப்பு அலகு செயல்பட்டு வருகிறது. குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பெரும்பாலும் வருகிற அழைப்புகள் பஸ் நிலையத்தில் சிறுவர் மற்றும் சிறுமிகள் சுற்றித்திரிவதாக தான்.

அங்கு சென்று அதிகாரிகள் சிறுவர், சிறுமிகளிடம் விசாரணை நடத்தி அவர்களை மீட்கிறார்கள். இதுபோல் யாசகம் பெறும் குழந்தைகளையும் மீட்டு வருகிறார்கள். இவ்வாறு வருகிறவர்களை மீட்கவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகம் செயல்பட்டு வருகிறது.தற்போது மேலும் குழந்தைகளின் வசதிக்காக குழந்தைகள் உதவி மையம் திருப்பூர் கலைஞர் மத்திய பஸ்நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் இது திறக்கப்பட உள்ளது.

இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாவது:குழந்தைகள் பாதுகாப்பிற்காகவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை பெறவும் 1098 இலவச எண் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. திருப்பூர் மாவட்டத்தை பொருத்தவரை இந்த எண்ணிற்கு மாதத்திற்கு சராசரியாக 180 முதல் 190 புகார்கள் வருகிறது. இதன்போில் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

தற்போது பஸ் நிலையங்களுக்கு வீட்டை விட்டு வெளியேறி வருகிற சிறுவர்கள், சிறுமிகள் மற்றும் வழிதவறி வந்தவர்கள், யாசகம் பெறும் குழந்தைகளுக்காக உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் இதுசெயல்படும். இதற்கு தேவையான பணியாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இன்னும் சில நாட்களில் இது திறக்கப்பட உள்ளது. குழந்தைகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கப்படும். இதுதவிர பாலியல் சீண்டலுக்கு உள்ளான குழந்தைகள், இளம் வயது கர்ப்பம், பள்ளியில் சேர்ப்பது உள்ளிட்ட புகார்கள் தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே இந்த உதவி மையத்தை தேவைப்படுகிறவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இதுபோல் திருப்பூர் ரயில் நிலையத்திலும் குழந்தைகள் உதவி மையம் அமைக்கப்பட இருக்கிறது. குழந்தை தொழிலாளர்கள் நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டாலும் புகார்கள் தொிவிக்கலாம். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.