சென்னை: வனவிலங்கு வார கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, நேற்று தலைமை செயலகத்தில் வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் சமீபத்திய அறிக்கையை வெளியிட்டார். அதன்படி, தமிழ்நாட்டில் கணக்கிடப்பட்ட 3,170 காட்டு யானைகள் உள்ளன. இது முந்தைய கணக்கெடுப்பில் இருந்த 3,063 என்ற எண்ணிக்கையை விட 107 யானைகள் அதிகம். இதுகுறித்து அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியதாவது:
தமிழ்நாட்டின் யானைகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள இந்த நிலையான வளர்ச்சி, அறிவியலை அடிப்படையாக கொண்ட வனவிலங்கு மேலாண்மை மற்றும் சமூக பங்களிப்பின் காரணமாக விளங்குகிறது. இது தமிழகத்தின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. வளம் குன்றிய காடுகளை மீட்டெடுப்பதில் இருந்து, யானைகள் வழித்தடங்களை வலுப்படுத்துவது மற்றும் மனித-யானை மோதலை தடுக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது வரை, எங்கள் அணுகுமுறை முழுமையானதாகவும் மக்களை மையமாகக் கொண்டதாகவும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு கூறும்போது, ‘‘தமிழ்நாட்டின் யானைகள் பாதுகாப்பு திட்டங்களின் கீழ், அகத்தியமலை யானைகள் காப்பகத்தை அறிவித்துள்ளது. தந்தை பெரியார் மற்றும் காவேரி தெற்கு வனவிலங்கு சரணாலயங்களை அறிவித்துள்ளது. மேலும் யானைகளின் வாழ்விடத்தின் 2.8 லட்சம் ஹெக்டேருக்கு அதிகமான பரப்பளவில் பாதுகாப்பை விரிவுபடுத்தியுள்ளது, இது அதன் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது” என்றார்.