செல்போன் செயலி வாயிலாக மக்கள் தொகை கணக்கெடுப்பு: ஒன்றிய உள்துறை அமைச்சகம், நிதி அமைச்சகத்திற்கு கடிதம்
டெல்லி: மக்கள் தொகை கணக்கெடுப்பை செல்போன் மூலம் மேற்கொள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையம் புதிய செயலியை உருவாக்கியது. அடுத்தாண்டு ஏப்ரல் முதல் வீடுகள் கணக்கெடுப்பு பணியும், 2027 மார்ச் முதல் மக்கள் தொகை மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு பணியும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான செயலிகள் வடிவு அமைக்கப்பட்டுள்ளன. ஐபோன், ஆண்ட்ராய்டு செல்போன்களில் செயல்படும் வகையில் ஆங்கிலம், இந்தி மற்றும் மாநில மொழிகளில் இந்த செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியாளர்கள் தங்களது சொந்த மொபைல் மூலம் இந்த செயலிகள் வாயிலாக மக்கள் தொகை விவரங்களை பதிவேற்றம் செய்ய பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு 35 லட்சம் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்கு ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சகம், நிதி அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.