2026-27ம் நிதியாண்டில் செல்போன் ரீசார்ஜ் கட்டணம் 20% உயரும்: வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தரும் அறிக்கை வெளியீடு
புதுடெல்லி: நாடு முழுவதும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சேவைகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, குரலழைப்பு (வாய்ஸ் கால்) மற்றும் டேட்டா (நெட்) பயன்பாடு ஆகியவை கடந்த சில ஆண்டுகளில் அபரிமிதமான வளர்ச்சியைச் சந்தித்துள்ளன. கடந்த 2017 முதல் 2025ம் நிதியாண்டு வரையிலான காலகட்டத்தில், குரலழைப்பு பயன்பாடு ஆண்டுக்கு 12.6% என்ற அளவிலும், டேட்டா பயன்பாடு 37% என்ற அளவிலும் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. சராசரியாக, ஒரு சந்தாதாரர் தனது மொபைலில் தினமும் 3 மணி நேரத்திற்கும் மேலாக செலவிடுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த காலங்களில் புதிய நிறுவனங்களின் வருகையால் கட்டணங்களைக் குறைக்கும் போட்டி இருந்தது. ஆனால் தற்போது, புதிய போட்டியாளர்களிடமிருந்து பெரிய ஆபத்து இல்லாததால், தற்போதுள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டணங்களை நிர்ணயிப்பதில் வலுவான அதிகாரத்தை செலுத்தி வருகின்றன. இந்தச் சூழலில், இந்தியாவின் முன்னணி நிதிச் சேவை நிறுவனமான ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில், செல்போன் கட்டண உயர்வு குறித்த முக்கியத் தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, வரும் 2026-27ம் நிதியாண்டில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் செல்போன் கட்டணங்களை சுமார் 20% வரை உயர்த்தக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 2026ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் கட்டண உயர்வு இருக்கும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது 2027ம் நிதியாண்டுக்குத் தள்ளிப்போகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சந்தாதாரர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 2% என்ற அளவில் தொடர்ந்து உயரும் என்றும், தொலைத்தொடர்புத் துறையின் ஒட்டுமொத்த சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய், 2025 முதல் 2030 வரை 9.8% விகிதத்தில் அதிகரித்து, 2030ல் ரூ.4,274 பில்லியனை எட்டும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
மேலும், இந்த அறிக்கையில் ஃபிக்சட் பிராட்பேண்ட் சேவைகளின் வருவாய் ஆண்டுக்கு 15.4% வளர்ச்சி அடையும் எனவும், இதில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் பெரும் பங்கு வகிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்டார்லிங்க் போன்ற செயற்கைக்கோள் தகவல் தொடர்பு சேவைகளால், செல்போன் சேவைத் துறையில் பெரிய இடையூறுகள் இப்போதைக்கு இருக்காது என்றும் அந்த அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.