Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

போதை பொருட்களுடன் விடிய விடிய கொண்டாட்டம்: குமரி ரிசார்ட்டில் மனைவிகளை மாற்றி உல்லாசம்?.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே ரிசார்ட்டில் உயர் ரக போதை பொருட்களுடன் விடிய விடிய நடந்த பிறந்தநாள் பார்ட்டியில் போதையின் மயக்கத்தில் இருந்தவர்கள் மனைவிகளை மாற்றி உல்லாசமாக இருந்த தகவல் போலீசார் விசாரணையில் வெளியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே தனியார் ரிசார்ட்டில் அரசால் தடை செய்யப்பட்ட உயர் ரக போதை பொருட்கள், வெளி நாட்டு மதுபானங்ளுடன் விடிய விடிய பிறந்தநாள் விழா கொண்டாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வந்த ரகசிய தவலையடுத்து எஸ்பி ஸ்டாலின் தலைமையிலான போலீசார் நள்ளிரவில் ரிசார்ட்டை சுற்றி வளைத்துள்ளனர். தொடர்ந்து காலை வரை போலீசார் கிடுக்கிப்பிடியாக விசாரணை நடத்தி உள்ளனர்.

அதைத்தொடர்ந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான குலசேகரம் பகுதியை சேர்ந்த கோகுல் கிருஷ்ணன் (34), அவரது மனைவி சவுமி (33), கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியை சேர்ந்த விதுன் (30), கோகுல் கிருஷ்ணனின் சகோதரர் கோவிந்த் கிருஷ்ணா (27), கோவாவை சேர்ந்த ஜெயராஜ் சிங் கவுடா (35), பெங்களூருவை சேர்ந்த சையத் பர்ஷான் (35), வாலன்ஸ் பால் (36), ரிசார்ட் உரிமையாளர் ராஜூ (64) ஆகிய 8 பேரை கைது செய்தனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள 8 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் குமரியை சேர்ந்த விஐபிக்கள் பலருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்து இருக்கிறது. அது குறித்து போலீசார் ரகசியமாக தகவல்களை சேகரித்து வருகின்றனர். இது தவிர சிறையில் உள்ளவர்களை காவலில் எடுத்து விசாரிக்கும் போது கூடுதல் தகவல்கள் கிடைக்கும் என்றும் போலீசார் நம்புகின்றனர்.

முக்கியமாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும், முன்னாள் எம்எல்ஏவின் பேரன்களுமான கோகுல் கிருஷ்ணன், கோவிந்த் கிருஷ்ணா, கோகுல் கிருஷ்ணனின் மனைவி சவுமி ஆகியோரிடம் கூடுதல் தகவல்களை கேட்டு பெற போலீசார் திட்டமிட்டு உள்ளனர். ஆகவே 8 பேரையும் காவலில் எடுக்கும் பணிகளை போலீசார் செய்து வருகின்றனர். இதனால் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள், வெளிநாட்டு மது விற்பனை செய்தவர்கள், இவர்களுக்கு பின்னால் இருக்கும் விஐபிக்கள் பலரும் கலக்கத்தில் உள்ளனர். இதற்கிடையே தற்போது இது தொடர்பாக அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: குலசேகரத்தை சேர்ந்தவர் கோகுல கிருஷ்ணன் பிரபல அரசியல் கட்சியின் பின்புலம் கொண்ட முன்னாள் எம்எல்ஏ ஒருவரின் பேரன் ஆவார்.

அவரது மனைவி சவுமி இவர்களுக்கு சுமார் 8 வயதில் மகள் ஒருவர் இருக்கிறார். அவர் வீட்டில் இருந்தால் தங்களது தொழிலுக்கு இடையூறாக இருக்கும் என்பதால் வெளியூரில் தங்கி படிக்க வைத்துள்ளனர். கோகுல கிருஷ்ணனனும், அவரது மனைவியும் ஈவன்ட் ஆர்கனைசர் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை கடந்த 5 வருடங்களாக நடத்தி வருகின்றனர். அவரது தம்பி கோவிந்த கிருஷ்ணா. அவரும் சகோதரருடன் சேர்ந்து இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இதன் காரணமாக வெளிநாடுகள், மாநிலங்கள், மாவட்டங்களில் உள்ள பல்வேறு நிறுவன குழுக்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதன் மூலம் போலீசாரின் கெடுபிடிகள் இல்லாத இடங்களை பார்த்து அந்தந்தப் பகுதியில் உள்ள ரிசார்ட்டுகள், சொகுசு விடுதிகள் உள்ளிட்டவைகளை சீசனுக்கு தகுந்தாற்போல் ஒப்பந்தம் செய்து கொள்வார்.

பின்னர் இதில் கல்ச்சுரல் ப்ரோக்ராம் என்ற பெயரில் நடத்தப்படும் விழாக்களில் அரசால் தடை செய்யப்பட்ட உயர்தர போதை பொருட்களுடன் கூடிய வெளிநாட்டு மது விருந்துகள், ஆடல் பாடல், கேளிக்கை நிகழ்ச்சிகள், சட்ட விரோத செயல்களும் அரங்கேறும். போதையின் உச்சத்தில் மனைவிகளை மாற்றி உல்லாசத்தில் ஈடுபடும் நிகழ்வுகளும் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதற்கெல்லாம் தனித்தனியாக கட்டணங்களை வசூலித்து வந்துள்ளனர். இந்த விருந்தில் பங்கேற்க இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் ஆசைகளை தூண்டி விட்டு கலந்து கொள்ளும் வகையில் அழைப்பு விடுக்கப்படும். இதில் மாணவர்கள், இளைஞர்கள், தனிமையில் இருப்பவர்கள், குடும்ப சுமையால் தத்தளிப்பவர்கள், மன நிம்மதியை தேடுபவர்கள், திருமணமானவர்கள் என்று பல்வேறு தரப்பினரும் பங்கேற்கின்றனர்.

இதற்கு நுழைவு கட்டணமாக இடத்திற்கும், நிகழ்ச்சிகளுக்கும் தகுந்தாற்போல் ரூ. ஆயிரம் முதல் ரூ.2 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. பின்னர் உள்ளே நுழைந்ததும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் தனித்தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் நிகழ்ச்சி ஒன்றிற்கு சுமார் ரூ. 25 முதல் ரூ.50 லட்சம் வரை ஏற்பாட்டாளர்கள் லாபம் சம்பாதிப்பதாக கூறப்படுகிறது. இது போன்ற நிகழ்வுகளில் தான் போதை பொருட்கள் சப்ளை நடந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்காக தனித்தனி புரோக்கர்களும் உள்ளனர். அவர்களின் மூலமாக இதுபோன்ற நிகழ்வுகளில் வெளிநாட்டு மதுபானங்களில் இருந்து பல்வேறு வகையிலான உயர்ரக போதை பொருட்கள் சப்ளையாகி உள்ளன.

இந்த குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் குறித்து ரகசிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இருப்பினும் திரைமறையில் சில விஐபிக்களுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்து இருக்கிறது. ஆகவே இன்னும் யார்? யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்று விசாரித்து வருகிறோம். இது தவிர உயர்ரக வெளி நாட்டு மது பாட்டில்கள், போதை பொருட்கள் எப்படி? யார் மூலம்? சப்ளை செய்யப்படுகிறது என்பது குறித்த தகவல்களையும் சேகரித்து வருகிறோம் என்றனர்.

பல லட்சம் மதிப்பு போதை பொருள் பறிமுதல்

அஞ்சுகிராமம் அருகே ரிசார்ட்டில் சோதனை நடத்திய போலீசார் பல லட்சம் மதிப்புள்ள போதை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். அதன்படி பறிமுதல் செய்யப்பட்டுள்ள பொருட்களின் விவரம் வருமாறு: 2 சொகுசு கார்கள், வெளிநாட்டு உயர் ரக மதுபாட்டில்கள் 102, மார்பின் மருந்து 5, கஞ்சா 25 கிராம், எல்எஸ்டி போதை மருந்துகள், எம்டிஎம்ஏ போதை மருந்து 600 மில்லி கிராம், மெட்டோ பெட்டமின் 1.100 எம்ஜி, கஞ்சா ஆயில் 6.30 எம்ஜி, ஓஜி போதை பொருள் 5.100 எம்ஜி, கொகைன் 250 கிராம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.