டெயிர் அல் பலாஹ்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முயற்சியால், கடந்த 10ம் தேதி முதல் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. ஆனால், இந்த ஒப்பந்தம் தொடக்கம் முதலே முழுமையாகப் பின்பற்றப்படவில்லை. இந்நிலையில், தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகர் அருகே இஸ்ரேல் படையினர் மீது ஹமாஸ் அமைப்பினர் நேற்று முன்தினம் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இஸ்ரேல் அதிகாரி குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும் போரின் தொடக்கத்தில் மீட்கப்பட்ட பணய கைதியின் சில உடல் பாகங்களை ஹமாஸ் ஒப்படைத்ததை தொடர்ந்தும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காசா மீது ‘சக்திவாய்ந்த’ தாக்குதல்களை நடத்த ராணுவத்திற்கு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து காசா மீது, விமானங்கள், பீரங்கிகள் மூலம் இஸ்ரேல் குண்டு மழை பொழிந்தது. இதில் மொத்தம் 104 பேர் பலியானார்கள். பலியானவர்களில் 39 பேர் குழந்தைகள், 12 பேர் பெண்கள். இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பதிலடியாக, உயிரிழந்த மற்றொரு பணயக்கைதியின் உடலை ஒப்படைப்பதை ஒத்திவைப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
* போர் நிறுத்தம் மீண்டும் அமல்
இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாலஸ்தீன எல்லைக்குள் செயல்படும் தீவிரவாத அமைப்புக்கள் இஸ்ரேல் படைகளை தாக்கியதாக குறிப்பிட்டுள்ளது. காசாவிற்குள் தீவிரவாத இலக்குகள் மற்றும் தீவிரவாதிகள் தாக்கப்பட்டு தாக்குதல்களை முடித்த பின், போர் நிறுத்தம் மீண்டும் அமலுக்கு வருவதாக இஸ்ரேல் ராணுவம் நேற்று தெரிவித்தது. ஆனால் ஒப்பந்தத்தை மீறினால் உடனடியாக உறுதியான பதிலடி கொடுக்கப்படும் என்றும் இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.
