இறுதிக்கட்டத்தை எட்டிய போர் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் -ஹமாஸ் ஒப்புதல்: அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்
வாஷிங்டன்: இஸ்ரேல் காசா போர் தொடங்கி கடந்த செவ்வாய்க்கிழமையுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இந்த நீடித்த போரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களும், 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி பாலஸ்தீனர்களும் பலியாகி விட்டனர். போரை முடிவுக்கு கொண்டு வர எகிப்து, கத்தார், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தொடர் முயற்சிகளை எடுத்து வந்தன. இதன்ஒரு பகுதியாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த வாரம் 20 அம்ச அமைதி திட்டம் ஒன்றை அறிவித்திருந்தார். இந்நிலையில் இஸ்ரேல் காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை இருநாடுகளும் ஏற்று கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டிரம்ப் தனது சோஷியல் ட்ரூத் சமூக வலைதளத்தில், “இஸ்ரேலும், ஹமாசும் போர் நிறுத்த அமைதி திட்டத்தின் முதல் கட்டத்தில் கையெழுத்திட்டுள்ளன என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இதன்படி ஹமாஸ் பிடித்து சென்ற அனைத்து பணய கைதிகளும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்பதே இதன்பொருள். இதேபோல், நீடித்த, வலுவான மற்றும் நிரந்தர அமைதியை உருவாக்க காசாவில் இருந்து இஸ்ரேல் படைகளை திரும்ப பெறும். அனைத்து தரப்பினரும் நியாயமாக நடத்தப்படுவார்கள்” என தெரிவித்துள்ளார்.
* டிரம்ப்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அறிவிப்புக்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தன் சமூக ஊடகத்தில், “டிரம்ப்பின் முதற்கட்ட அமைதி ஒப்பந்தத்தை வரவேற்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார். அதை தொடர்ந்து நேற்று இரவு பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்புடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வரலாற்று சிறப்புமிக்க காசா அமைதித் திட்டத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து பிரதமர் மோடி, ‘எனது நண்பர் அதிபர் டிரம்புடன் பேசி வரலாற்றுச் சிறப்புமிக்க காசா அமைதித் திட்டத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தேன். வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் அடைந்துள்ள நல்ல முன்னேற்றத்தையும் மதிப்பாய்வு செய்தேன். மேலும் வரும் வாரங்களில் நெருங்கிய தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.