சத்தியமங்கலம் : ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி நேருநகரை சேர்ந்தவர் சந்தோஷ்(25). கடந்த 19ம் தேதி இரவு சத்தியமங்கலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள இணைப்பு சாலையில் தனது பைக்கை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றார்.
பொருட்கள் வாங்கி கொண்டு வெளியே வந்த போது தனது பைக் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சந்தோஷ் அளித்த புகாரின் பேரில் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே அங்குள்ள ஒரு கடையின் முன்புறம் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில், சாலையில் நடந்து சென்ற நபர் ஒருவர் அக்கம்பக்கம் நோட்டமிட்டு பைக்கின் மீது அமர்ந்தபடி அங்குமிங்கும் சுற்றி பார்த்துவிட்டு பைக்கை வேகமாக தள்ளிச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.
அதனை தொடர்ந்து போலீஸ் ஸ்டேஷன் அருகே கொள்ளையனின் கூட்டாளி மற்றொரு பைக்கில் அமர்ந்தபடி காலால் தள்ளியபடி ஓட்டிச்செல்லும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த காட்சி வைரலாகி வருகிறது. இதையடுத்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பைக்கை திருடி சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.



