மதுராந்தகம்: மதுராந்தகம் நகரில் உள்ள விவேகானந்தா வித்யாலயா குழும பள்ளி சார்பில், நவராத்திரி விழாவையொட்டி தேரடி தெருவில் உள்ள சிபிஎஸ்இ பள்ளி வளாகத்தில் நவராத்திரி கொலு நிகழ்ச்சி நேற்று மாலை தொடங்கியது. விழாவையொட்டி பள்ளி வளாகத்தில் வண்ண விளக்குகளாலும் தோரணங்களாலும் மலர்களாலும் அலங் கரிக்கப்பட்டு சிறுவர்களிடமிருந்து பெறப்பட்ட பொம்மைகளை கொண்டு நவராத்திரி விழா கொலு அமைத்தனர்.
நிகழ்ச்சிக்கு, விவேகானந்தா குழும பள்ளி தலைவர் லோகராஜ் தலைமை தாங்கினார். தாளாளர் ஹரினாக்ஷி, பள்ளி இயக்குனர் மங்கையர்கரசி, சிபிஎஸ்சி பள்ளி முதல்வர் சீதாலட்சுமி, புல முதல்வர் கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் திலகவதி அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில், பள்ளி சிறுவர்கள், தெய்வங்களின் வேடம் அணிந்தும் வண்ண உடைய அணிந்தும் நிகழ்ச்சியில் பங்கேற்று பக்தி பாடல்களை பாடி அசத்தினர்.
மேலும் ஆசிரியர்கள் நவராத்திரி விழா குறித்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விளக்கி பேசினர். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். கலந்து கொண்டவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று மாலை தொடங்கிய நவராத்திரி விழா வரும் 3ம்தேதி வரை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை விவேகானந்தா குழும பள்ளி நிர்வாகம் செய்து வருகிறது.